“அது AI போட்டோ... என் மீதான நடவடிக்கையை ஏற்க முடியாது" - கருப்பு முருகானந்தம்
பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எவ்வித முறையான விசாரணையும் இன்றி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக கருப்பு முருகானந்தம் விளக்கம் அளித்துள்ளார்.
'தன்னுடன் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்து குழந்தை பெற்றுக் கொண்ட பின்னரும் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக' திருச்சியை சேர்ந்த பாஜக ஓபிசி அணி மாநிலச்செயலாளர் திவ்யா சேஷாத்ரி புகார் அளித்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், தனது குழந்தைகளின் பள்ளிப் பதிவேடுகளில் அவரே பாதுகாவலராக (Guardian) கையெழுத்திட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்தத் தொடர்பின் காரணமாக தான் கர்ப்பமடைந்ததாகவும், ஆனால் தனது விருப்பத்திற்கு மாறாக கருவைக் கலைக்க அவர் கட்டாயப்படுத்தியதாகவும் திவ்யா சேஷாத்திரி தனது புகாரில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் கட்சி மேலிடத்திற்கு சென்ற நிலையில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தடாலடி நடவடிக்கையாக பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கருப்பு முருகானந்தத்தை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எவ்வித முறையான விசாரணையும் இன்றி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக கருப்பு முருகானந்தம் விளக்கம் அளித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், புனையப்பட்ட போலிப் புகார் மனுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு என் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், இத்தகைய போலிச் செய்திகளையும், வதந்திகளையும் பரப்புவோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.