×

"அம்மா உணவகத்தில் கலைஞர் போட்டோ" - எதிர்ப்புக்கு பின் பெயர் பலகை நீக்கம்!

 

முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோதே மதுரவாயலில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை திமுகவினர் சூறையாடினர். சமூக வலைதளங்களில் இதுதொடர்பான வீடியோவும் வைரலானது. ஆனால் உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் அவர்களைக் கட்சியை விட்டு விலக்கினார். அப்போதே அதிமுக தலைவர்கள் திமுகவின் அராஜங்கள் ஆரம்பித்துவிட்டது என வீடியோவை பகிர்ந்து கண்டனத்தை பதிவு செய்தனர். 

மேலும் அம்மா உணவகங்களை எக்காரணம் கொண்டும் மூடக் கூடாது எனவும் வலியுறுத்தினர். அம்மா உணவகத்திற்கு மூடுவிழா நடத்துவதற்கான எதிர்மறை செயல்களும் அரங்கேறிக் கொண்டிருப்பதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்களை திடீர் பணி நீக்கம் செய்து விட்டு திமுக பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்களை நியமித்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

அதேபோல அந்த உணவகத்தின் பெயர் பலகையில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் படம் பொறிக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக தேர்தல் அறிக்கையில் கலைஞர் உணவகம் உருவாக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஒருவேளை அதற்கான அடித்தளமாக இந்த மாற்றம் இருக்குமோ என்ற பேச்சும் எழுந்துள்ளது. இதன் காரணமாக அதிமுகவினர் கொந்தளித்தனர். விவகாரம் பூதாகரமாக வெடித்ததால், தற்போது சர்ச்சைக்குரிய அந்த பெயர் பலகை நீக்கப்பட்டுள்ளது.