×

கருமுத்து கண்ணன் மறைவு - சீமான், அண்ணாமலை இரங்கல் 

 

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கடந்த 18 ஆண்டுகளாக தக்கார் பொறுப்பில் இருந்து வந்த கருமுத்து கண்ணன் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இவர் மதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி , தியாகராசர் நூற்பாலை ஆகியவற்றின் தலைவராக இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்த கருமுத்து கண்ணனின் உடல் மதுரை கோச்சடையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "தொழிற்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிய பெருந்தகை ஐயா கருமுத்து தியாகராஜன் அவர்களின் மகனும், மதுரையில் புகழ்பெற்ற தியாகராஜர் கல்லூரிகள், தியாகராஜர் ஆலைகள் மற்றும் பல நிறுவனங்களின் தலைவரும், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்காரும், தமிழ்ப் பற்றாளருமான பெருமதிப்பிற்குரிய ஐயா கருமுத்து கண்ணன் அவர்கள் மறைவுற்ற துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அன்னைத்தமிழின் மீது பெருங்காதலும், தமிழ்த்தேசியக் கருத்தியலில் மிகுந்த உறுதிப்பாடும் கொண்டிருந்த ஐயா கருமுத்து கண்ணன் அவர்களது மறைவு மதுரை மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ப்பேரினத்திற்குமான பேரிழப்பாகும்.        


அதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை தியாகராஜர் கல்லூரிகளின் தாளாளரும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக இருந்து ஆலய திருப்பணிகளை திறம்படச் செய்தவரும், சிறந்த பண்பாளருமாகிய திரு கருமுத்து கண்ணன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர்தம் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு பாஜக  சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.