"விஜய்க்கு முதல் தலைமுறை வாக்காளர்கள் தான் அதிகம் வாக்களிப்பார்கள்”- கார்த்தி சிதம்பரம்
விஜய்க்கு ரசிகர் கூட்டம் இருக்கு அது அவருக்கு ஆதரவான கூட்டமாக இருக்கும், அது ஓட்டாகவும் மாறும் ஆனால் சீட்டாக மாறுமா? என்பது கேள்விதான்? என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
குரோம்பேட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், “நகர்ப்புறத்தில் விஜய்க்கு ஓட்டு அதிகமாக வரலாம். கிராமப்புறத்தில் அது கம்மியாக இருக்கும். தமிழக வெற்றி கழகம் விசில் அடிச்சா அடிச்சிட்டு போகட்டும், நாங்க கை அசைச்சிட்டு போயிட்டே இருப்போம். விஜய்க்கு ரசிகர் கூட்டம் இருக்கு. அது அவருக்கு ஆதரவான கூட்டமாக இருக்கும், அது ஓட்டாகவும் மாறும் ஆனால் சீட்டாக மாறுமா? என்பது கேள்விதான். அந்தக் கட்சிக்கு கட்டமைப்பு அவ்வளவாக இல்லை. அது பிற்காலத்தில் வரலாம். ஆனால் கணிசமான வாக்கு வங்கி இருக்கும். தமிழக வெற்றி கழகத்துக்கும் விஜய்க்கும் முதல் தலைமுறை வாக்காளர்கள் தான் அதிகம் வாக்களிப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் அரசியல் சித்தாந்தம் இல்லாதவர்கள். பொதுவான மக்களாக இருக்கலாம். அதிமுகவையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை, அவர்களுக்கும் கணிசமான வாக்கு வாங்கி இருக்கிறது. அவர்களது கூட்டணிக்கும் வாக்கு வங்கி இருக்கிறது. இந்த தேர்தல் மிகுந்த போட்டியான தேர்தலாக இருக்கும். ஆனால் ஒற்றுமையான இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
நீண்ட நாட்கள் கூட்டணியில் இருப்பதனால் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கு. அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது. நாங்கள் திமுகவுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம். காங்கிரஸ் 234 தொகுதிகளிலும் விருப்ப மனுக்களை வாங்கி வைத்திருக்கிறது. தொகுதி பங்கீட்டுக்கு ஏற்ப நாங்கள் யாருக்கு சீட் தருவது என்பதை உறுதி செய்வோம், திமுகவிடம் காங்கிரஸ் ராஜ்யசபா சீட்டு கேட்க வாய்ப்பு இருக்கு. மார்ச் 16 ராஜ்யசபா தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிப்ரவரி 22ஆம் தேதிக்கு பிறகு திமுக அமைக்கும் கூட்டணி பேச்சு வார்த்தை குழுவில் இது குறித்து காங்கிரஸ் பேச வாய்ப்புள்ளது. திமுக குறித்து மாணிக்கம் தாக்கூர் பேசியது குறித்து, அவரிடம் தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்” என்றார்.