×

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காததால் தான் அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தார்- கார்த்தி சிதம்பரம் 

 

சசிகலா துணிச்சலான முடிவை எடுக்க தவறியதால் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் கட்சி வலிமை ஆகிவிட்டதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதார பகுதி மாவட்டத்தில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் ஏற்பாட்டில் டாட்டா குழுமத்தைச் சேர்ந்த டிசிஎஸ் ஃபவுண்டேஷன் சி எஸ் ஆர் நிதி மூலம் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு பெற்று அந்த நிதியிலிருந்து புதுக்கோட்டை சுகாதாரப்பகுதி மாவட்டத்தில் திருமயம் பொன்னமராவதி மற்றும் அரிமளம் வட்டாரங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 25 லட்சத்திற்கான மருத்துவ உபகரணங்களையும் அதேபோல் அறந்தாங்கி சுகாதாரப்பகுதி மாவட்டத்தில் திருவரங்குளம் மற்றும் நாகுடி வட்டாரங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 25 லட்சத்திற்கான மருத்துவ உபகரணங்களும் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி, “தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சித்தாந்த ரீதியில் பாஜகவில் சேரவில்லை, ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காததால் அவர் பாஜகவில் சேர்ந்தார். அவரை ஊடகங்கள் தான் வளர்த்து விடுகிறது. அவரை ஒரு பொருட்டாக கருத வேண்டியதில்லை. சசிகலா வலிமையான தலைவராக வருவார் என்று நான் ஏற்கனவே சொன்ன கருத்து தவறாக அமைந்துவிட்டது. அவர் துணிச்சலான முடிவை எடுக்க தவறியதால் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் கட்சி வலிமை ஆகிவிட்டது.


பாராளுமன்றத்தை நடத்தக்கூடாது என்பது பாஜகவின் திட்டம், அதனால் தான் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார், மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை, யார் வேண்டுமானும் தனது கருத்தை எங்கு வேண்டுமாலும் பேசலாம், ஜனநாயக முறைப்படி இதற்கு யாரும் கட்டுபாடு விதிக்க முடியாது” என்றார்.