”ஜனநாயகன் படத்தில் அப்படி என்ன சீரியஸாக இருக்கோ? பராசக்தியை பார்க்க விருப்பமில்லை” - கார்த்தி சிதம்பரம்
பராசக்தி படத்தை நான் பார்ப்பதாக இல்லை. அது ஒரு கமர்சியல் படம் அவ்வளவு தான் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், “சில படங்கள் வெளியாகின்றன. சில படங்கள் தடைபடுகின்றன. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் சென்று முடிவு எடுப்பார்கள். ஒரு திரைப்படத்திற்காக நீதித்துறை அதிகாரி தமிழ்நாட்டிற்கு வருகிறாரென்றால், அரசு அதனை மிக சீரியஸாக எடுத்துக் கொள்கிறது என்பதையே காட்டுகிறது. அந்த படத்தில் அவ்வளவு சீரியஸான விஷயம் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் தேதிதான். அதில் நான் தெளிவாக உள்ளேன். பராசக்தி படத்தை நான் பார்ப்பதாக இல்லை. பராசக்தி படம் ஒரு கமர்ஷியல் படம், அவ்வளவுதான். ஒரு படத்தை வைத்து அரசியல் நேரேட்டிவ் செட் பண்ணலாம் என நினைத்தால் அது அபத்தம். கமர்சியல் படங்களை அரசியல் நோக்கத்தோடு அணுகுவது தவறானது’’
கட்சியில் பலவித கருத்துகள் இருக்கலாம்… ஆனால் திமுக உடன் மட்டும்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தவறு? அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது இயல்பானது. காங்கிரஸ்க்கும் அந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் ரோட்டரி கிளப் நடத்திவிட்டு செல்லலாமே. தமிழ்நாட்டிற்கு வரும் மோடி இட்லி, தோசைதான் பிடிக்கும் என்பார். 4 மாதங்களுக்கு மோடி இப்படித்தான் பேசுவார்” என்றார்.