☰
×

"நாங்க என்ன போதை பொருள் கடத்தினோமா, நைட்டியுடன் கைது செய்திருக்கிறீர்கள்"- கார்த்திகா

 

நாங்கள் என்ன போதைப் பொருள் கடத்தினோமா, இரவு உடையுடன் என்னைக் கைது செய்திருக்கிறீர்கள்  என நாதக கார்த்திகா கூறியுள்ளார்.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா வேட்பாளராகப் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் சில சம்பவங்கள் தொடர்பாக, கார்த்திகா மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். குறிப்பாக, முதலமைச்சர் விஜய் பயணித்த பாதையில் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தேர்தல் காலத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக கார்த்திகா மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் தொடர்ச்சியாக, கோவையில் இருந்த கார்த்திகாவைக் கைது செய்வதற்காகத் தாராபுரம் காவல்துறையினர் சென்றுள்ளனர். அப்போது கார்த்திகாவையும் அவரது கணவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா அளித்துள்ள பேட்டியில், "போதைப்பொருள் விற்பவர்கள், கள்ளச்சந்தையில் சாராயம் விற்பவர்கள் தைரியமாக இருக்கிறார்கள். ஆனால், நாம் தமிழர் கட்சி வேட்பாளரான என்னை எதற்காகக் கைது செய்தார்கள் என்றே கூறவில்லை. இரவு உடையில் என்னைக் கைது செய்துள்ளனர். நான் என்ன குற்றம் செய்தேன்? இறுதிப் பிரச்சார தினத்தன்று ஆளுங்கட்சி மட்டும்தான் வாக்கு கேட்க முடியுமா? நாங்கள் வாக்கு சேகரிக்க உரிமை இல்லையா? மேலிடத்தில் இருந்து அழுத்தம் என போலீஸாரே சொல்கிறார்கள். போராளிகள் நாங்கள் தெருவில் நிற்கிறோம்" என்றார்.