பராசக்தி ஒன்றும் ஆவணப்படமல்ல... அது ஒரு பொழுதுபோக்கு படம்தான்- கார்த்தி சிதம்பரம்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது என கார்த்திக் சிதம்பரம் எம்பி தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை முழுமையாக எதிர்கிறேன். இது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று. ஜனாதிபதி ஆட்சி முறையில் மட்டுமே குறிப்பிட்ட காலமுறை இருக்க முடியும், நம் நாட்டின் அரசியல் சாசனத்திற்கும் ஜனநாயக ஆட்சி முறைக்கும் இந்தத் திட்டம் எதிரானது. தேர்தல் செலவுகளைக் குறைப்பதாகக் கூறப்படும் வாதத்தை மறுக்கிறேன். இந்தியாவில் தேர்தலுக்கு அவ்வளவு பெரிய செலவுகள் ஏற்படுவதில்லை. ஆண்டுக்கு ஐந்து அல்லது ஆறு தேர்தல்கள் நடப்பதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது. அடிக்கடி தேர்தல்கள் வரும்போதுதான் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும், அப்போதுதான் அரசியல் கட்சிகள் மெத்தனப்போக்கின்றி விழிப்போடு செயல்படும். மாநிலத் தேர்தல்கள் வாயிலாகக்கூட மத்திய அரசுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட முடியும் என்பதால், அடிக்கடி தேர்தல் வருவதே சிறந்தது.
திரைப்படங்கள் வாயிலாகத் தமிழக அரசியலை நிர்ணயிக்க நினைப்பது தவறு.'பராசக்தி' உள்ளிட்ட திரைப்பட விவகாரங்கள் தற்போதைய சூழலில் தேவையற்றவை. பராசக்தியோ, ஜனநாயகனோ எந்த திரைப்படமாக இருந்தாலும் அதனால் எந்த மாற்றமும் நிகழாது பராசக்தி ஒன்றும் ஆவணப்படம் இல்லை, அது ஒரு பொழுதுபோக்கு படம் மட்டுமே. தெருநாய் தொல்லை, ரேபிஸ் மரணங்கள், குப்பை மேலாண்மை, கல்விக்கட்டண உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவையே மக்கள் சந்திக்கும் உண்மையான பிரச்சினைகள், இவற்றை விடுத்து திரைப்படங்களை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது அரசியல் கட்சிகளின் எதார்த்தமான எதிர்பார்ப்புதான். 1967 முதல் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் நேரடி ஆட்சியில் இல்லை என்பது உண்மைதான், இடையில் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விட்டது. 234 தொகுதிகளுக்குள் தான் அனைத்தும் அடங்கியுள்ளன, தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் குறித்துத் தெரியவரும். விஜய்க்குப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால் கூட்டம் கூடுகிறது, ஆனால் ரசிகர்களின் ஆதரவு என்பது வேறு, அது வாக்குகளாகவும் இடங்களாகவும் மாறுவது என்பது வேறு. ராகுல் காந்தியைப் பொறுத்தவரை நியாயமான கோரிக்கைகளுக்கும், தனிமனித மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கும் எப்போதும் ஆதரவளிப்பார்” என்றார்.