“கரகாட்ட கலைஞர்கள் 'கரகாட்டக்காரன்' படத்தில் வருவது போன்ற உடைகளை அணிய வேண்டும்”- ஐகோர்ட் கிளை
கரகாட்டம் ஆடும் கலைஞர்கள் 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தில் வருவது போன்ற கண்ணியமான உடைகளை அணிய. (proper dress code as displayed in amil Movie- 'Karagattakaran') வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அடுத்த மேலகரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், எங்கள் ஊரில் முப்பிடாதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கரகாட்டம் நடத்த அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் மனு அளித்திருந்தேன். காவல்துறை இதற்கு அனுமதி மறுத்து விட்டனர். எனவே கரகாட்டம் நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமீபகாலமாக கரகாட்டம் என்ற பெயரில் ஆபாசமான 'ஆடல் பாடல்' நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கரகாட்டம் என்பது தமிழகப் பண்பாட்டின் மிகச்சிறந்த நடன கலை. கரகாட்டம்' என்று அழைக்கப்படும் இந்த பாரம்பரிய நாட்டுப்புற நடனம் தமிழ்நாடு மாநிலத்தில் மிகவும் பிரபலமானது. இது மழைக்கடவுளான மாரியம்மனுக்கு நேர்த்திக்கடனாக ஆடப்படுகிறது. இந்த நடனத்தின் சிறப்பம்சமே, நடனக் கலைஞர் தனது தலையில் பானைகள் அல்லது செம்புகளைச் சுமந்து கொண்டு, கீழே விழாமல் சமநிலைப்படுத்தி இசைக்கு ஏற்றார் போல் ஆடும் சிக்கலான உடல் அசைவுகளாகும். இதற்கு மிகப்பெரிய திறமையும், ஒருமுகப்படுத்தப்பட்ட கவனமும் தேவைப்படுகிறது. கரகாட்டம் ஆடும் கலைஞர்கள், புகழ்பெற்ற 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தில் வருவது போன்ற கண்ணியமான உடைகளை அணிய வேண்டும். எனவே மனுதாரர் கரகாட்டம் நடத்த காவல்துறையிடம் புதிய மனு அளித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம். மேலும் இரவு ஏழு மணியிலிருந்து பத்து மணிக்குள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.