×

 "ஓட்டுக்கு காசு கொடுப்பதாக இருந்தால் ஊர் பக்கம் வராதீங்க" - கிராம மக்கள் பேனர்

 

“ஓட்டுக்கு காசு கொடுத்தால் ஊர் பக்கம் வராதீங்க” என காரைக்கால் மீனவ கிராமத்தின் அதிரடி அறிவிப்பு பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஏப்ரல் 09, 2026 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு செட்டியார் கிராம மக்கள் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர். இது குறித்து அக்கிராமப் பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வைத்துள்ள எச்சரிக்கை பேனரில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் வாக்காளர்களுக்குப் பணமோ அல்லது இதரப் பொருட்களோ வழங்கக் கூடாது என்றும், அதேபோல் வாக்காளர்களும் அத்தகைய எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்றும் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மீறி பணம் அல்லது பொருட்களைக் கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது ஊர் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

"எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல" என்பதை உரக்கச் சொல்லும் விதமாக, பணத்திற்குப் பதிலாக வாழ்வாதாரத்திற்கான திட்டங்களை முன்னெடுக்குமாறு வேட்பாளர்களுக்கு அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களைப் புறக்கணிப்போம் என்றும், லஞ்சம் பெறுவதும் கொடுப்பதும் குற்றமே என்பதையும் சுட்டிக்காட்டி வைக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகை, தற்போது காரைக்காலில் பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது.