பறக்கும் காவடி எடுத்த பக்தரின் கையில் தவெக கொடியை கொடுத்து விளம்பரம்
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையில் இருந்து 41 நாட்கள் விரதம் இருந்து பறக்கும் காவடி எடுத்து திருச்செந்தூருக்கு புறப்பட்ட முருகன் பக்தர்கள் கையில் தமிழக வெற்றிக்கழக கொடியை கொடுத்து விளம்பரப்படுத்திய நிர்வாகிகளின் எயல் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை, இரணியல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள் 41 நாள் விரதம் இருந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, வேல் காவடி, பறக்கும் காவடி,தேற் காவடி, அக்னி காவடி,புஷ்பக் காவடி என பல்வேறு வகையான காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக நேற்று சென்றனர்.
இதற்காக திங்கள்சந்தை மற்றும் இரணியல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான முருக பக்தர்கள் காவடியுடன் திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பறக்கும் காவடி எடுத்த பக்தர் ஒருவரின் கையில் தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் தங்களது கட்சி கொடியை கொடுத்து அதனை விளம்பரப்படுத்தி உள்ளனர். மேலும் கொடியை உயர்த்தி பிடித்து குத்தாட்டம் போட்டுள்ளனர். ஆண்டாண்டு காலமாக தங்களது வேண்டுதல்களுக்காக விரதம் இருந்து உடல் வலிக்க காவடி சுமந்து செல்லும் முருக பக்தர்கள் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வாக இது இருப்பதாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ முகநூல் பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில் ஆன்மீகத்தில் அரசியலைப் புகுத்தும் விஜய் கட்சியினருக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.