‘கனிமொழி எம்பி, மேயர் பிரியா மன்னிப்பு கேட்க வேண்டும்’.. அமைச்சர் ஜெகதீஸ்வரி..!
தமிழக முதலமைச்சரை திமுக மேடையில் பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் அவதூறாக பேசியதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அதே மேடையில் இருந்து அவரைக் கண்டிக்காத கனிமொழி எம்பி மற்றும் மேயர் பிரியா ஆகியோர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சரின் இந்தக் கருத்துகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் விளக்கம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக முதலமைச்சரை பற்றி அவதூறாகவும், இழிவாகவும் பேசியவர்களின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இத்தகைய தரக்குறைவான பேச்சுகளில் ஈடுபட்டவர்கள் தங்களது தவறை உணர்ந்து, தமிழக முதல்-அமைச்சரிடமும் தமிழக மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
முதலமைச்சரைப் பற்றி இழிவாகப் பேசப்பட்ட வேளையில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி @KanimozhiDMK, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா @PriyarajanDMK ஆகியோர் மேடையில் சிரித்துக் கொண்டிருந்தது பொறுப்பான பொது வாழ்வுக்கு ஏற்ற செயலல்ல. இத்தகைய அணுகுமுறை அரசியல் நாகரிகம் மற்றும் பொதுவாழ்வின் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
தொடர்ந்து இத்தகைய அவதூறான பேச்சுகளில் ஈடுபடுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும். தேர்தல்களில் மக்களின் தீர்ப்பை அரசியல் கட்சிகள் மதித்து, தங்களது செயல்பாடுகளைச் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மக்களின் ஆதரவை பெறுவதற்கு அவதூறுப்பேச்சுகள் அல்ல, கண்ணியமான அரசியலும் பொறுப்பான செயல்பாடுகளுமே அவசியம்.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தனிநபர் அவமதிப்பும் தரக்குறைவான பேச்சும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்களது பேச்சிலும் செயலிலும் பொறுப்புணர்வுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
எனவே, தமிழக முதல்-அமைச்சரை அவதூறாகவும் இழிவாகவும் பேசியவர்கள் தங்களது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அரசியல் நாகரிகத்தையும் பொதுவெளியின் கண்ணியத்தையும் காப்பது அனைவரின் கடமையாகும் என தெரிவித்து உள்ளார்.