காஞ்சிபுரத்தில் துயரம்: அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி!
காஞ்சிபுரம் வாலாஜாபாத் சேர்ந்தவர் வரபிரசாத் (வயது 17). இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம். படித்து வந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த வரபிரசாத், தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து விறகு வெட்டுவதற்காக வல்லபாக்கம் பகுதியில் உள்ள தோப்புக்கு சென்றுள்ளார்.
அந்தவகையில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள தோப்பில் அவர் விறகு வெட்டிக் கொண்டிருந்தபோது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் வரபிரசாத் மிதித்ததாக கூறப்படுகிறது.
இதில், மின்சாரம் பாய்ந்ததில் வரபிரசாத் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் அளித்த தகவலின்பேரில் வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வரபிரசாத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, மின் கம்பி அறுந்து கிடந்ததை முறையாக கவனிக்காமல் மின்வாரியத்தினர் அலட்சியமாக செயல்பட்டதே வரபிரசாத்தின் உயிரிழப்புக் காரணம் என கூறி வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, வாலாஜாபாத் - தாம்பரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும், அறுந்து கிடந்த மின் கம்பியை அகற்றுவதில் அலட்சியமாக செயல்பட்ட மின்வாரியத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகையால், அந்த பகுதியில் சில மணி பதற்றமான சூழல் நிலவியது.