"முற்றுப்புள்ளி எட்டும் வரை போராட வேண்டும்" - எம்.பியாக குரல் கொடுக்கும் கமல்ஹாசன்
பாளையங்கோட்டையில் கவின் செல்வகணேஷ் எனும் 27 வயது ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக கமல்ஹாசன் எம்பி கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் பட்டியலின இளைஞர் கவின். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த கவின், நெல்லையை சேர்ந்த உதவி ஆய்வாளர் தம்பதியான சரவணகுமார் - கிருஷ்ணவேணியின் மகளை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கவின் மீது பெண்வீட்டார் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனிடையே தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக கே.டி.சி. நகர் மருத்துவமனைக்கு சென்ற கவினை, அவரது காதலியின் சகோதரன் சந்தித்துப் பேசியுள்ளார். அதன்பிறகு அடையாளம் தெரியாத நபர்களால் கவின் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கவின், காதலித்து வந்த பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று தானாக சரணடைந்தார். தனது சகோதரியை காதலிக்கும்படி டார்ச்சர் செய்து வந்ததால் கவினை கொன்றதாகவும் சுர்ஜித் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள எம்.பி. கமல்ஹாசன், “பாளையங்கோட்டையில் கவின் செல்வகணேஷ் எனும் 27 வயது ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடும்குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தரவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கவினை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சாதிய வன்கொடுமை எனும் சமூக இழிவிற்கு எதிராக அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று திரள வேண்டும். சாதிதான் நம்முடைய முதல் எதிரி என்பதை உணர வேண்டும். முற்றுப்புள்ளி எட்டும் வரை போராட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.