×

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கமல்ஹாசன்!

 

திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி  மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சித் தலைவருமான கமல்ஹாசன். திமுக மற்றும் அதன் கூட்டணி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் எம்பி ஆகிறார். திமுக அதிமுக கட்சிகளுக்கு மாற்று என கட்சி தொடங்கிய கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினர் என்ற அளவில் நிறுத்தி இருக்கிறார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை சீட்டு ஒதுக்கிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் மநீம தலைவர் கமல்ஹாசன். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இச்சந்திப்பு நடந்தது. நாட்டுக்கு தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளதாகவும் கமல்ஹாசன் பேட்டியளித்தார்.


இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கழக கூட்டணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக போட்டியிடவுள்ள அக்கட்சியின் தலைவர் கலைஞானி 
கமல்ஹாசன் சார், கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அண்ணா அறிவாலயத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்ற நிகழ்வில் நாமும் உடனிருந்தோம். அன்போடு வாழ்த்தி மகிழ்ந்தோம். இந்திய ஜனநாயகத்தை - மதசார்பின்மையை - தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க, தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் கமல் சாரின் குரல், மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளர்.