“ஸ்டாலின் பெயரை கூறினாலே டெல்லிக்கு BP எகிறுகிறது... உதயநிதி பெயரை கேட்டால் நடுக்கம்”- கமல்ஹாசன்
திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருவிற்கு ஆதரவாக உறையூரில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய கமல்ஹாசன், “ஆபத்து நேரத்தில் மக்களை நேரடியாக சந்திப்பவன் தான் உண்மையான தலைவன். இந்த தேர்தலில் நமக்கு முன் இருக்கும் கேள்வி மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டுமா அல்லது அது அடகு வைக்கப்பட வேண்டுமா என்பது தான் அதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும். வெவ்வேறு கொள்கையுடையவர்கள், விமர்சனம் செய்த 15 கட்சிகளை ஒருங்கிணைத்து வைத்துள்ள தலைவர் தான் ஸ்டாலின். மக்களுக்கு ஆபத்து வரும் போது ஓடி வருவது தான் தலைவனுக்கான அடையாளம். கொரோனா, புயல், மழை, விபத்து என்று வரும் போது யார் வருகின்றார்கள் என்பதை யோசித்து பாருங்கள். கஜா புயலின் போது நாங்கள் நேரடியாக மக்களை சந்தித்தோம். ஆனால் அன்றைய முதல்வர் ஹெலிக்காப்டரில் சென்று கொண்டிருந்தார். மக்களை தேடி வருவது தான் உண்மையான தலைமை.
திருச்சியின் வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பு அதிகம். ஸ்டாலின் என்கிற பெயரை கூறினாலே டெல்லியில் BP எகுறுகிறது. உதயநிதி என்ற பெயர் கூறினால் இங்குள்ள தமிழின துரோகிகளுக்கு நடுக்கம் வருகிறது. நாம் இருக்கும் போது தமிழ் இனத்திற்கு துரோகம் செய்ய முடியாது. கிழக்கு இந்தியா கம்பெனி என்கிற பெயரில் நாட்டை கைப்பற்றியது போல் வடக்கு இந்திய கம்பெனி இப்போது வருகிறது. எல்லோரையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அப்படி இருந்தால் நாடு நாடாக இருக்காது இது அவர்களுக்கும் தெரியும். தமிழ்நாடு தேசிய நீரோட்டத்தில் கலக்காது என்பார்கள் அது பொய். நேருவின் பெயரே அவரின் தந்தை தேசிய நீரோட்டத்தில் கலந்து இருப்பதால் தான்.அவர்களின் சூழ்ச்சியை மக்கள் தான் முறியடிக்க வேண்டும். பொய்யான கருத்து திணிப்புகளை நம்பாதீர்கள். நீங்கள் சிந்தித்து பாருங்கள். நாடு முன்னேற நாம் சிந்திக்க வேண்டும். திராவிடத்தை யாராலும் எவனாலும் வீழ்த்த முடியாது” என்றார்.