×

ஈரோடு கிழக்கு தொகுதியில்  கமல் இன்று பிரசாரம்..

 


ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.  காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இதில்  திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்  காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது.  அக்கட்சியின் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவருமான  ஈவிகேஎஸ் இளங்கோவன் களம் காண்கிறார்.  இந்த தேர்தலில்  மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.  கடந்த சட்டமன்ற தேர்தலில் இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி 10 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே, இடைத்தேர்தலில் மநீம தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கமல் காங்கிரஸுக்கு ஆதரவளித்தார். மேலும்,  ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர பரப்புரையில் ஈடுபட திட்டமிட்டு உள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.  அதன்படி, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிப்ரவரி 19ம் தேதி (இன்று) கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். 5 இடங்களில் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்வார் என்றும்,  வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்ய உள்ள கமல்ஹாசன் ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பார் என்றும்  கூறப்படுகிறது. .