×

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு- 2 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல்

 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கில் இரண்டு வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த வந்த மாணவி, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி  மர்மமான முறையில் மரணமடைந்தார். இதனால் வன்முறை ஏற்பட்டு பள்ளி தீவைக்கப்பட்டது.தொடர்ந்து மாணவியின் தந்தை தாக்கல் செய்த வழக்கு அடிப்படையில் வழக்கு சிபிசிஐடி-க்கு  மாற்றப்பட்டது. அதன்படி வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், வழக்கை  விசாரிக்க  உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மாணவியின் தாய் செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்  விசாரணைக்கு வந்த போது ஆஜரான  காவல்துறை தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ், மாணவி மரண வழக்கின் விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், மாணவி பயன்படுத்திய செல்ஃபோனை ஆய்வு செய்த தடயவியல் துறையின் அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார். வழக்கின் இறுதி அறிக்கை இரண்டு வாரங்களில்  தாக்கல் செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனிடையே, மாணவி மரண குறித்த வழக்கின் விசாரணையை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற கோரிய தாயார் மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், பதில் மனு தாக்கல் செய்யும் வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற  மாணவி பெற்றோர் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை  நிராகரித்த நீதிபதி வழக்குகளின் விசாரணையை மார்ச் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.