×

”விஜய் களத்திற்கு வந்துவிட்டார் ஆனால் அவர் மீது தர்பீஸ் வீசுகிறார்கள்”- காளியம்மாள் 

 

பாஜக நிர்பந்தத்தால் கட்சிகள் கூட்டணியில் இணைந்து உள்ளதாக சொல்லும் விஜய் உடன்  ஒரு கட்சி கூட கூட்டணிக்கு செல்லவில்லையே என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் காளியம்மாள் பதில் அளித்துள்ளார்.

திருவள்ளூர் சட்ட மன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணாவை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் காளியம்மாள் திருவலங்காடு, பேரம்பாக்கம், மணவாள நகர் பகுதிகளில் பரப்பரை செய்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் 4 வயது பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை, 60 வயது மூதாட்டிக்கும் பாதுகாப்பு இல்லை எனவும், இந்த நாடு எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது? பெண்களை மென்மேலும் கடன் வாங்க வைத்திருக்கிறது. அதை தான் இவர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யவில்லை , திமுகவின் பொறுப்பாளர்களின் மனைவிகள் மட்டுமே நகை தள்ளுபடி செய்திருக்கிறார்கள், கொசத்தலை ஆற்றில் தரைப்பாலம் போடுவேன் என துரைமுருகன் கூறியிருந்தார். தரையும் இல்லை, பாலமும் இல்லை. துரைமுருகனின் மருத்துவ கல்லூரிக்கு செல்லும் வழி இல்லை என 4 வாய்க்கால்களை அடைத்தனர், அதற்காக சாலை போட்டிருக்கிறார், ஆனால் மக்களுக்காக சாலை அமைக்கவில்லை, குடிநீர் வழங்கப்படவில்லை.

மகாபாரதத்தில் திரௌபதி துகில புரியப்பட்டது கதையில் பார்த்திருப்போம், ஆனால் நிஜ வாழ்க்கையில் நடந்த போது ஒரு பெண்ணாக இந்த சட்ட மன்றத்திற்கு முதல்வராக தான் கால் பதிப்பேன் என வைராக்கியத்துடன் சென்றவர் ஜெயலலிதா. முதியோர் உதவித்தொகையை திமுகவினர் நிறுத்தி வைத்தவர்கள். வெறும் காகிதத்தில் அல்ல உங்கள் கைகளில் வந்து சேரும் திட்டங்கள் அதிமுகவின் திட்டங்கள். மாதந்தோறும் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை வகுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி, அதனை காப்பி அடித்தது திராவிட முன்னேற்றக் கழகம். ஈழத் தமிழர்களுக்கான குடியுரிமை வழங்க வேண்டும் என  கோரிக்கை வைத்ததின் பேரில், அதை பரிசீலிப்பதாக எடப்பாடி கூறியதால் அதிமுகவில் இணைந்தேன்... யார் அந்த சார் என்பது திமுக அரசு இன்னும் கண்டுபிடிக்கவில்லை, ஆட்சிக்கு வந்தவுடன் திமுக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது. விஜய் ரசிகர்கள் அரசியல் படுத்தப்படவில்லை. தலைவராக இருந்து அதனைவிஜய் செய்ய வேண்டும். பாஜக அழுத்ததில் மற்ற கட்சிகள் கூட்டணிக்கு  வந்ததாக விஜய் கூறுகிறார், அப்படி இருந்தும் யாரும் உங்களுடன் வரவில்லையே! விஜய் களத்திற்கு வந்துவிட்டார் ஆனால் அவர் மீது தர்பீஸ் வீசுகிறார்கள் இன்னும் அவர்கள் அரசியல்படுத்தப்படவில்லை” என்றார்.