“ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை”- கடம்பூர் ராஜூ பேச்சால் அதிமுகவினர் இடையே சலசலப்பு
ஜெயலலிதா செய்தது வரலாற்றுப்பிழை. 1998ல் பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்ததால் திமுக கூட்டணி 14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டியில் அதிமுக- பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ஜெயலலிதா செய்தது வரலாற்றுப்பிழை. 1998ல் பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்ததால் திமுக கூட்டணி 14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. திமுக தமிழகத்தில் வளர பாஜகவே காரணம். பாஜக கூட்டணி முறிவு என்ற வரலாற்று பிழையை செய்துவிட்டோம். வாஜ்பாயுடனான கூட்டணி காரணமாகவே திமுக பொருளாதார ரீதியாக வளர்ந்தது” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் மீண்டும் தனது பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த கடம்பூர் ராஜூ, நாங்கள் குல தெய்வமாக வணங்கும் அம்மா ஜெயலலிதா குறித்து அப்படி கூறவில்லை.. அந்த தகவல் தவறானது. பாஜக நிர்வாகிகள் நடத்திய கூட்டத்தில் பாஜகவின் நிலையை எடுத்து சொன்னேன். 1998ல் முதன்முறையாக வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி அமைவதற்கு வித்திட்டவர் ஜெயலலிதா. அப்போது தமிழ்நாட்டின் பிரச்சனைகளை மையப்படுத்தி நாங்கள் பேசுகின்ற போது, சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வெளியே வந்துவிட்டோம். அப்போது திமுகவுடன் கூட்டணி வைக்கும்போது பாஜக நல்லக் கட்சி. ஆனால் இப்போது அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக தீண்டத்தகாத கட்சியா? என்ற அர்த்தத்தில் தான் பேசினேனே தவிர, எனது கருத்து முழுவதுமாக திரித்து கூறப்பட்டுள்ளது” என்றார்.