×

ஒன்றிய அரசின் 12 துறைகளில் தனியார்த்துறை நிபுணர்கள் நேரடி நியமனம்- வீரமணி கண்டனம்

 

ஒன்றிய அரசு 12 துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் 20 தனியார்த் துறை நிபுணர்களை இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்களாக நேரடியாக நியமிக்கலாமா? நியமிக்க முடியுமா? மாநில அரசுகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பொதுநல அமைப்புகள் ஒன்று திரண்டு கண்டனக் குரலை எழுப்பி, ஒன்றிய அரசின் முடிவுகளைத் திரும்பப் பெற வைக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடி தலைமையிலான (ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. அரசு) ஒன்றிய அரசு 12 துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் 20 தனியார்த் துறை நிபுணர்களை இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்களாக நேரடியாக நியமிக்க முடிவு செய்துள்ளதாம்.
இந்த நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு எதுவும் பின்பற்றப்படமாட்டாதாம்!

‘‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ நாளேட்டின் செய்தி!

இப்படி ஓர் அதிர்ச்சிக்குரிய செய்தி 19.5.2023 தேதியிட்ட ‘‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ நாளேட்டில் வெளிவந்துள்ளது. இதைவிட அப்பட்டமான அரசமைப்புச் சட்ட விதிகள் மீறல் - அரசமைப்புச் சட்ட நெறிகளுக்கு நேர் எதிரான நிலைப்பாடு, அதனை மதிக்காத அவப்போக்கு வேறொன்று இருக்க முடியுமா?.
இப்படி முக்கிய 12 துறைகளுக்கு 20 தனியார்த் துறை நிபுணர்களை நேரடியாக உயர் பொறுப்புகளில் நியமிப்பது எந்த விதியின்கீழ் நடைபெறுகிறது?

சட்ட விரோத, எதேச்சதிகார நடவடிக்கைகள் ஆகாதா?

ஒன்றிய அரசின் பதவிகளானாலும், மாநில அரசுகளின் பதவிகள் - பணிகள் ஆனாலும், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அல்லது மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன்மூலமே நடைபெற வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்ட விதிகள் (Articles) 315 முதல் 323 வரை உள்ளனவே - அவற்றின்படி இந்த நியமனங்கள் சட்ட விரோத, எதேச்சதிகார நடவடிக்கைகள் ஆகாதா?
இந்திய அரசமைப்புச் சட்டப்படி, ஒன்றிய அரசானாலும், மாநில அரசானாலும் வேலை - பணிகளுக்கான நியமனங்களை - சமூகநீதி அடிப்படையில் அவரவர்களுக்கு அரசு ஆணைகள்படி ஒதுக்கப்பட்டு, விகிதாச்சாரத்தின்படி - முறைப்படி தேர்வு, நேர்காணல் இவை நடத்தித்தானே நியமிக்க முடியும்?

அரசின் நிர்வாகக் கட்டமைப்பினையே சீர்குலைப்பதாகாதா?

பிரதமரும், ஒன்றிய அரசும் நேரிடையாக, அதுவும் தனியார்த் துறைகளில் உள்ளவர்களை - நிபுணர்கள் என்ற பெயரால் நியமிப்பது எந்த வகையில் - அதுவும் ஒப்பந்த அடிப்படையில் (On Contract Basis) திடீரென்று உள்ளே நுழைப்பது அரசின் நிர்வாகக் கட்டமைப்பினையே சீர்குலைப்பதாகாதா? இதேபோல, மாநில அரசுகளும், நியமனங்களை - ஒப்பந்த அடிப்படையிலும், தனியார் நிபுணர்கள் என்ற போர்வையிலும் நியமனம் செய்தால், அதை ஒன்றிய அரசு - அதன் துறைகள் ஏற்குமா?

இது ஒரு வகையான தந்திர வியூகம்!

ஒன்றிய அரசு போன்றவற்றில் உள்ள பணிமனைகளை முக்கியப் பணிகளை காவி மயமாக்கிட (Saffronisation of Public Services) இது ஒரு வகையான தந்திர வியூகம் அல்லாது வேறு என்ன?
சாதாரணமாக ‘10-A’ என்று முன்பு குறிப்பிடும் தற்காலிக அவசர நியமனங்களைக் கூட, சர்வீஸ் கமிஷன் தேர்வுகளுக்குப் பின் உறுதி செய்யப்பட்டால் ஒழிய, அவர்கள் இப்படி எங்காவது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அனுமதி உண்டா? அதில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் விதிமுறைகள் உண்டா?

லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் என்னாவது?

ஆணைகளை இப்படிப் பிறப்பித்து சட்டத்தை வளைக்க - அரசமைப்புச் சட்டத்தினைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிவது போன்ற விரும்பத்தகாத நடவடிக்கைகளால் - முறையான தேர்வுகளை - பயிற்சிகள்மூலம் படித்து எழுதும் லட்சக்கணக்கான    இளைஞர்களின் எதிர்காலம் இப்படிப்பட்ட திடீர் உத்தியோக ‘இடைச்செருகல்கள்’மூலம் பறிக்கப்படுவது கொடுமையல்லவா?

மூத்த அதிகாரிகளை விரக்தியும், வேதனையும் அடையச் செய்யாதா?

முன்பே பல ஆண்டுகள் பணி செய்த ‘Seniority’ என்ற நிலை மூத்த அதிகாரிகளுக்குமேலே திடீரென இப்படி ‘‘புதிய உத்தரவு போடும்‘’ எஜமான நிபுணர்களைத் திணிப்பது அவர்களது உரிமையைப் பறித்து, அவர்களைப்  பணியாற்றுவதில் விரக்தியும், வேதனையும் அடையச் செய்யாதா?
இக்கேள்விகளுக்கு என்ன பதில்? நடைபெறுவது ஜனநாயக ஆட்சி - மக்கள் வாக்களிக்கும் ஆட்சி - ராஜ தர்பார் அல்ல, நினைத்ததை உடனடியாக நுழைப்பதற்கு?

பொதுநல அமைப்புகள் ஒன்று திரண்டு கண்டனக் குரலை எழுப்பவேண்டும்!

இதுபற்றி மாநில அரசுகள், எதிர்க்கட்சித் தலைவர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள் ஒன்று திரண்டு கண்டனக் குரலை எழுப்பி, இம்முடிவுகளைத் திரும்பப் பெற வைக்கவேண்டும். விழித்துக் கொள்ளுங்கள், பணித் தோழர்களே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.