×

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து தான் ஆக வேண்டும் - கி.வீரமணி

 

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் அளித்து தான் ஆக வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். 

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் சூத்தாட்டத்திற்கு தடை விதித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல் முறை அனுப்பி வைக்கப்பட்ட போது உரிய விளக்கம் கேட்டு அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். பின்னர் விளக்கம் அளித்து மசோதா அனுப்பப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறி மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து சட்டப்பேரவையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்ப அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனிடையே மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு தமிழக அரசியல் கட்சிகள் பலவையும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தமிழக ஆளுநர் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே கருதுகிறார். மீண்டும் தற்போது கூட்டப்படும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடையை அமல்படுத்தி ஆளுநருக்கு அனுப்பினால் சட்டம் 200-வது பிரிவின் கீழ் அதற்கு அவர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும். என்.எல்.சி விவகாரம் குறித்து தமிழக அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும். ஏற்கனவே நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு இடம் அளித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. அதை ஒரு அரசியல் கிளர்ச்சியாக மாற்றாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். நிச்சயம் தமிழக அரசு செய்யும் என்று நம்புகிறேன். இவ்வாறு கூறினார்.