×

ஆளுங்கட்சி என்ற மிதப்பிலேயே சிலர் இதுபோல நடந்துகொள்கிறார்கள்! பாலகிருஷ்ணன் கண்டனம்

 

திருச்சி சம்பவம் போன்ற நிகழ்வுகளை அனுமதிக்கவே முடியாது என அரசு உறுதியாக செயல்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

திருச்சி மாநகரம் ராஜா காலனி அருகே இறகு பந்து மைதானத்தை திறப்பதற்காக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு இன்று காலை சென்றபோது திருச்சி சிவாவை திருச்சி மாவட்ட திமுகவினர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கே.என் நேருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி அவருக்கு கருப்பு கொடி காட்டினர். இது தொடர்பாக கண்டன கோஷங்களை எழுப்பியவர்களை செசன்ஸ் கோர்ட் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

திடீரென காவல் நிலையத்திற்குச் சென்ற திமுகவை சேர்ந்த காஜாமலை விஜய், முத்து செல்வம், ராமதாஸ் துரைராஜ், திருப்பதி உள்ளிட்டோர் கருப்புக் கொடி காட்டியவர்களை காவல் நிலையத்திற்குள் வைத்து தாக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக திமுகவினர் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை கட்சியிலிருந்து நீக்கி திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சியில், திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டு அதை தொடர்ந்து காவல்நிலையத்திலும் புகுந்து தாக்கியுள்ளார்கள். இந்த அத்துமீறிய செயல் கண்டனத்திற்குரியது. அனுமதிக்க முடியாதது. ஆளும் கட்சி மிதப்பிலேயே சிலர் இதுபோல நடந்துகொள்கிறார்கள். திமுக தலைமை உடனடியாக செயல்பட்டு, நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

காவலர்களின் புகார் அடிப்படையில் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை அவசியமானது.‌ மேலும் கூடுதலாக... இதுபோன்ற நிகழ்வுகளை அனுமதிக்கவே முடியாது என்று உறுதியாக அரசு‌ செயல்பட வேண்டும்.  பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அத்துடன் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தலை தடுத்தல்  சட்டத்தின் கீழும் வழக்கு பதிய வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.