ஒன்றிய அரசு முகமையின் மீது வழக்கு பதிவு செய்க - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எப்.ஐ.ஆர். வெளியான பிரச்சனையில் ஒன்றிய அரசு முகமை மீதும் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை பற்றிய முதல் தகவல் அறிக்கையின் விபரங்கள் வெளிவந்த வழக்கில், தேசிய தகவல் மையத்தை வழக்கு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை நடத்த வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையின் முதல் தகவல் அறிக்கை விபரங்கள், வன்கொடுமைக்குள்ளான பெண் விபரங்களோடு வெளியாகி பரவலான கண்டனம் எழுந்தது. இவ்வாறு குற்றமிழைத்த அதிகாரிகள் உள்ளிட்டு கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சென்னை உயர் நீதிமன்றமும், பல அமைப்புகளும் இது தொடர்பாக கடுமையாக எதிர்வினையாற்றியது.
இந்த நிலையில், முதல் தகவல் அறிக்கை வெளிவந்த குற்றத்திற்கு ஒன்றிய அரசின் தேசிய தகவல் மையமே காரணம் என்று அந்த முகமையின் விளக்கம் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, புதிய குற்றவியல் சட்டங்களின் பிரிவுகளும், பெயரும் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் முதல் தகவல் அறிக்கை விபரங்களை மறைக்க முடியாமல் போனதாக தெரிவிக்கின்றன. அவ்வாறானால், புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை மாதமே அமலுக்கு வந்துவிட்ட நிலையில் அப்போதிருந்து நடைபெற்ற எல்லா வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோர் விபரங்கள் இப்படி கசியவில்லையே, இந்த வழக்கில் மட்டும் விபரங்கள் எப்படி கசிந்தது ? என்ற கேள்வி எழுகிறது.