×

#JUSTIN உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!.. செந்தில் பாலாஜியே வருக வருக..! - முதல்வர் ஸ்டாலின்.. 

 

முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி  கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி, கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட்  12ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.  அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.

எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” என்று குறிப்பிட்டுள்ளார்.