×

வாட்ஸ்அப்பில் காட்டினால் போதும்..! - ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்வோருக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி சலுகை!

 

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கையேடு-2026"-ஐ தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டார். இந்த கையேட்டில் வாக்காளர் தகுதி, வாக்குப்பதிவு நடைமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் புதிய முயற்சிகள் குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் எப்போதும் குறைவாகவே இருந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், வரும் தேர்தலில் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவை அதிகரிக்கத் தேர்தல் ஆணையம் பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, பெருந்தொகையைக் கொண்டு செல்வதில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கச் சில தளர்வுகளையும் விளக்கங்களையும் அவர் அளித்தார்:

ஆவணங்கள் கட்டாயம்: உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைக் கையில் வைத்திருந்தால், ரூ.50,000-க்கும் அதிகமான தொகையைத் தாராளமாக எடுத்துச் செல்லலாம்.

வாட்ஸ்அப் ஆவணங்கள்: மருத்துவக் காரணங்களுக்காக அவசரமாகப் பணம் கொண்டு செல்பவர்களுக்குப் பெரிய நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவச் செலவிற்காக ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்லும் போது, அதற்கான ஆவணங்களை (மருத்துவச் சீட்டு போன்றவை) காகித வடிவில் மட்டுமின்றி, வாட்ஸ்அப்பில் (WhatsApp) கூட காண்பிக்கலாம் என்று அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

பறக்கும் படைக்குக் கடும் எச்சரிக்கை :

பொதுமக்களைத் தேர்தல் அதிகாரிகள் அல்லது பறக்கும் படையினர் தேவையின்றித் துன்புறுத்தக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. இது குறித்து அர்ச்சனா பட்நாயக் கூறுகையில், "பொதுமக்களை எக்காரணம் கொண்டும் தொல்லை செய்யக்கூடாது எனப் பறக்கும் படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொண்டு செல்லும் பணத்தைப் பறிமுதல் செய்வதில் நியாயமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, முறையான காரணங்களுக்காகப் பணம் கொண்டு செல்பவர்களை அச்சுறுத்தக் கூடாது." என தெரிவித்துள்ளார்