ஒரே ஒரு மிசைல்.. எஃப்-18 காலி..!- வீடியோ வெளியிட்ட ஈரான்.. 'பொய்' என மறுக்கும் அமெரிக்கா..!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான நேரடி மோதல், தற்போது 'தகவல் போர்' (Information War) என்ற அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தக் கடுமையான போரினால் சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகளின் முக்கியக் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. மிக முக்கியமாக, உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டதால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உலகப் பொருளாதாரம் முடங்கும் சூழல் உருவானது.
இதனைத் தொடர்ந்து, உலக நாடுகளின் அழுத்தத்திற்குப் பணிந்து மார்ச் 23 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தார். ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச அமைதித் திட்டத்தையும் அமெரிக்கா முன்மொழிந்தது. இருப்பினும், பதற்றம் தணிந்தபாடில்லை.
எஃப்-18 விமானம் வீழ்த்தப்பட்டதா?
இந்தச் சூழலில், அமெரிக்காவின் உயர்திறன் கொண்ட எஃப்-18 (F-18) போர் விமானத்தை ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தாக்கி அழித்ததாக ஈரானியத் தொலைக்காட்சி நிறுவனம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. சாபஹார் (Chabahar) பகுதிக்கு மேலே பறந்தபோது, ஈரானின் நவீன வான் பாதுகாப்பு அமைப்பால் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஈரான் வெளியிட்ட இந்த வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், அமெரிக்கத் தலைமை ராணுவக் கட்டுப்பாட்டு மையம் (CENTCOM) இதற்குப் பலமான மறுப்பு தெரிவித்துள்ளது. "ஈரான் வெளியிட்ட வீடியோ முற்றிலும் போலியானது; எங்களது எந்தப் போர் விமானமும் சுடப்படவில்லை" என அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
முந்தைய தாக்குதல் புகார்கள்
ஈரான் இது போன்ற வீடியோக்களை வெளியிடுவது இது முதல் முறையல்ல. கடந்த வாரங்களில்:
-
அமெரிக்காவின் எஃப்-15 (F-15) போர் விமானம்.
-
எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாத, 5-ம் தலைமுறை அதிநவீன எஃப்-35 லைட்னிங் 2 (F-35 Lightning II) விமானம். ஆகியவற்றையும் தாக்கி அழித்ததாக ஈரான் வீடியோக்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோக்களும் போலியானவை என்றே அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.