×

#JUST IN : ராட்சத பாய்லர் வெடித்த விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு..!

 

கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் ’ஜெயின் மெட்டல்ஸ்’ எனப்படும் உலோக உருக்கு தனியார் தொழிற்சாலை மூன்று கிளைகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்று ஷிப்டுகளில் தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். பல வகையான உலோக பொருட்களை தரம் பிரித்து உருக்கி, மொத்த விற்பனை செய்யும் இந்த தொழிற்சாலையில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) அதிகாலை நான்கு மணியளவில் ராட்சத பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

பாய்லர் வெடித்த சத்தத்தை கேட்டு, அருகில் உள்ள தொழிற்சாலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் விரைந்து வந்து, காவல்துறை மற்றும் தீயணப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தின்போது, தொழிற்சாலையில் பணியில் இருந்த பீகாரைச் சேர்ந்த ரவி ரஞ்சன் (24) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் இந்த விபத்தில் படுகாயங்களுடன் பரிதவித்து வந்த தொழிலாளர்களான பீகாரைச் சேர்ந்த பூசன் குமார் (25), ஓம் குமார் (22), ரஞ்சித் குமார் (35), மத்திய பிரதேசச் சார்ந்த சிம்பர் சிங் (24) ஆகிய நான்கு பேரையும் மீட்ட தீயணைப்பு வீரர்கள், கும்மிடிப்பூண்டி கோட்டைக்கரை மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் பூசன் குமார் (25) என்பவர் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கும்மிடிப்பூண்டி காவல்துறை, விபத்துக்கு காரணம் மின்கசிவா அல்லது அதிகப்படியான இரும்புகளை ஒரே நேரத்தில் உருக்கியபோது ஏற்பட்ட விபத்தா போன்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.