☰
×

#JUST IN : வாக்கு இயந்திரம் பழுது.. மதுராந்தகத்தில் வாக்கு இயந்திரம் பழுது..!

 

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து சுயேட்சை வேட்பாளர் வெளியேற்றம்

11வது பூத் வாக்கு இயந்திரம் பழுது அடைந்த நிலையில், அதை எண்ணாமல் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு சென்றதால் சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்தார்

மதுராந்தகம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி முதல் சுற்றில் 14 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, 11-வது எண் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகு பழுதடைந்து செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் நிலை குறித்து சுயேச்சை வேட்பாளர் ஜி. மூர்த்தி கேள்வி எழுப்பியதுடன், பழுதடைந்த இயந்திரத்துடன் தொடர்புடைய விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதுகுறித்து சுயேச்சை வேட்பாளர் மூர்த்தி கூறுகையில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, ஒரு சுற்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த பின்னரே அடுத்த சுற்றுக்குச் செல்ல வேண்டும். மேலும், பழுதடைந்த இயந்திரத்தில் பதிவான வாக்குகளை உறுதி செய்வதற்காக, அதனுடன் தொடர்புடைய வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கைச் சீட்டுகளை எண்ணுவது குறித்து உரிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

முதல் சுற்றில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு தொடர்பாக உரிய விளக்கம் அளிக்காமல் அடுத்தகட்ட வாக்கு எண்ணிக்கைக்குச் செல்வது சரியல்ல. இந்த விவகாரத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி.வி. அய்யம்மாள் ஜமால், வேட்பாளர் ஜி. மூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கைச் சீட்டுகள் எண்ணிக்கை இறுதியில் மேற்கொள்ளப்படும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டதாகவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்ததார். எனவே வாக்கு எண்ணும் மையத்தில் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என அவர் அறிவுறுத்தினார்.

ஆனால், தேர்தல் நடத்தும் அலுவலர் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜி. மூர்த்தி, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி அதிகாரிகள் செயல்படவில்லை எனத் தொடர்ந்து குற்றம்சாட்டினார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் தொடர்ந்து தீவிரமடைந்த நிலையில், வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதியைக் கருத்தில் கொண்டு, காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் இணைந்து சுயேச்சை வேட்பாளர் ஜி. மூர்த்தியை வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.