×

#JUST IN :  வியாபாரிகளே உஷார்..! ரசாயன முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்தால் ரூ.5000 அபராதம்..!

 

முக்கனிகளில் முதல் கனியாக இருப்பது மாம்பழம். இந்த மாம்பழத்தின் வாசனை எங்கிருந்தாலும் நம்மை சுண்டி இழுத்து சாப்பிட அழைக்கும். ஆனால் மாம்பழம் வாங்கும்போது அது கார்பைடு வைத்து பழுக்க வைக்கப்பட்டதாக இருப்பதால் ஏற்படும் விளைவுகளை நினைத்து தான் மக்கள் பயப்படுகிறார்கள். 


இதனையறிந்த உணவு பாதுகாப்பு துறை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், செயற்கை முறையில் ரசாயன பொருட்கள் பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்கக்கூடாது என  எச்சரித்துள்ளது.


உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மாம்பழ விற்பனையாளர்கள் இயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். வரும் நாட்களில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும் அப்போது, ரசாயன முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு 5000ரூபாய் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியாக இதே முறைகேட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு கடையின் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் ரத்து செய்யப்படும்” எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கல் வைத்த மாம்பழத்தை கண்டறியும் வழிகள்:

செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தில் ஆங்காங்கே பச்சை நிறத்தில் திட்டுகள் இருக்கும்.

இந்த பச்சைநிற திட்டுகள் பழத்தில் இருக்கும் மஞ்சள் நிறத்தில் இருந்து தெளிவாக வேறுபட்டு காணப்படும்.

இயற்கையாக பழுத்த மாம்பழம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம் கலந்த ஒரே சீரான அளவில் கலந்ததுபோல இருக்கும்.

இயற்கையாக பழுத்த மாம்பழத்தை விட செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் அதிக மஞ்சள் நிறத்துடன் தோல் பளபளப்பாக இருக்கும். அதேபோல கல் வைத்து பழுக்க வைக்கப்படும்போது பழத்தின் தோல் சுருங்கிய தன்மையுடன் இருக்கும்.


செயற்கையாக ரசாயனக் கல் கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களில் சிலவற்றைச் சாப்பிடும்போது நாக்கில் சுர்ரென்று ஒருவகை எரிச்சல் ஏற்படும்.


இயற்கையாகப் பழுத்த மாம்பழங்கள் இயல்பாகவே வாசனை நீண்ட தொலைவிற்கு வீசும். முகந்து பார்த்தால் நல்ல நறுமணம் இருக்கும்.

இதுவே ரசாயனங்களால் பழுத்த பழமாக இருந்தால் முகர்ந்து பார்த்தாலும் அவ்வளவு நல்ல வாசனை வீசாது. அதை வைத்தும் கண்டுபிடிக்கலாம்.

அமுக்கி பாருங்கள் :

மாம்பழத்தை வாங்கும்போது உள்ளங்கைகளில் வைத்து மெதுவாக மாம்பழத்தை லேசாக சுற்றிலும் அமுக்கிப் பாருங்கள். எல்லா பகுதியிலும் ஒரே மாதிரியாகப் பழுத்திருந்தால் அது இயற்கையாகப் பழுத்தது.

இதுவே ஒரு சில இடங்களில் நன்கு பழுத்தும் சில இடங்களில் கெட்டியாகவும் இருந்தால் அது ரசாயனக்கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.


மாம்பழத்தின் நிறம் :

மாம்பழத்தை நறுக்கிப் பார்த்தாலும் இயற்கையாக பழுத்த மாம்பழத்திற்கும் செயற்கையாகப் பழுத்த மாம்பழத்திற்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடித்து விடலாம்.

மாம்பழத்தை வெட்டினால் எல்லா பகுதியும் நல்ல மஞ்சள் மற்றும் சிவப்பு (அடர் மஞ்சள்) கலந்த நிறத்தில் உள்பகுதி முழுவதும் ஒரே மாதிரி இருப்பது தான் இயற்கையாகப் பழுத்த மாம்பழம்.

இதுவே வெளிறிய மஞ்சளும் அடர் மஞ்சளும் என மாறி மாறி இருப்பது செயற்கையாக ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்டது.


​தண்ணீர் சோதனை :

மேற்கண்ட வழிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இந்த தண்ணீர் சோதனையின் மூலம் மிக எளிதாக செயற்கையாக ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களையும் இயற்கையாகப் பழுத்த பழங்களையும் கண்டுபிடித்துவிட முடியும்.


ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மாம்பழத்தை ஒவ்வொன்றாகப் போட்டு சோதனை செய்யுங்கள். மாம்பழம் தண்ணீருக்குள் மூழ்கினால் அது இயற்கையாகப் பழுத்தது. இதுவே பாதியிலோ அல்லது தண்ணீருக்கு மேலோ மிதந்தால் அது செயற்கையாக ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்டது என்பதை கண்டுபிடித்துவிடலாம்.


இந்த சோதனையில் நிறைய மாம்பழங்களை போட்டால் அடியில் இருப்பது மூழ்கத்தான் செய்யும். அதனால் ஒவ்வொன்றாகப் போட்டு பார்ப்பது நல்ல முடிவைக் கொடுக்கும்.

பக்க விளைவுகள் :

இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களைக் காட்டிலும் செயற்கையாக கால்சியம் கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தில் சூடு அதிகமாக இருக்கும்.

இந்த சூட்டின் காரணமாக அந்த மாம்பழங்களைச் சாப்பிடுகிறவர்களுக்கு கீழ்வரும் பக்க விளைவுகள் உண்டாகலாம்.

  • கடுமையான வயிற்று வலி,
  • தொண்டையின் உள்பகுதியில் எரிச்சல்,
  • டயேரியா,
  • வாந்தி

போன்ற பிரச்சினைகள் உண்டாகக்கூடும்.