#JUST IN : திருச்சியில் பரபரப்பு..! த.வெ.க வேட்பாளர் அலுவலகம் தீ வைத்து எரிப்பு..!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வேட்பாளர் ஸ்ரீரங்கம் ரமேஷ். இவர் த.வெ.க-வின் ஊடக மற்றும் செய்தித் தொடர்பு அணியின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவரது தேர்தல் அலுவலுகத்திற்கு யாரோ சிலர் தீ வைத்ததாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,,
எனது தொகுதி தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிப்பு!!
பாதுகாப்பற்ற சூழலில் நடைபெற உள்ளதா திருவரங்கம் தொகுதி வாக்கு எண்ணிக்கை?
திருச்சி மாவட்டம், திருவரங்கம் (ஶ்ரீரங்கம்) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம், பெட்டவாய்த்தலை பகுதியில் செயல்பட்டு வந்த எனது தேர்தல் அலுவலகம் ஒன்றை மர்ம நபர்கள் இன்று அதிகாலை தீயிட்டு கொளுத்தி முற்றிலும் அழித்துள்ளார்கள். அத்துடன் அங்கு வைக்கப்பட்ட பதாகைகள் அனைத்தையும் கிழித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் தலைமையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. காவல் துறை உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
மேலும் தேர்தல் நாளன்று வாக்கு எண்ணும் மையத்தில் எனக்கும், எமது கழக நிர்வாகிகள், தோழர்களுக்கும் எதிராக வன்முறை செயல்களை அரங்கேற்ற எதிர் கட்சிகள் திட்டமிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
உண்மையில் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, பாதுகாப்பாக நடைபெறுமா என்ற சந்தேகமும், அச்சமும் எழுந்துள்ளது.
இந்த பிரச்சனையில் தேர்தல் ஆணையம் மட்டும் தமிழக தேர்தல் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பாதுகாப்பு எங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்