#JUST IN : 'ஆவின் வெற்றி விருதுகள்' வழங்கப்படும் - அமைச்சர் விஜயலஷ்மி..!
பால்வளத்துறை அறிவிப்புகளை அமைச்சர் விஜயலஷ்மி வெளியிட்டார்
பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகள் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி,
- விபத்து இறப்பு இழப்பீடு: ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்வு.
- உறுப்பிழப்பு நிவாரணம்: இரண்டு உறுப்புகளை இழந்தவர்களுக்கான இழப்பீடு ரூ. 2.50 லட்சமாக உயர்வு.
- திருமண உதவித்தொகை: பெண் குழந்தைகளின் திருமண உதவித்தொகை ரூ. 1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுவோர் மற்றும் பொதுமக்கள் ஆவின் பால் பொருட்களை எளிதில் பெறும் வகையில், வணிக உரிம முறையில் (Business Franchisee) புதிய ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும்.
பால் கொள்முதலில் வெளிப்படைத்தன்மை, தடமறிதல் (Traceability) மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்தும் வகையில், பால் பண்ணைகளில் தொடக்கம் முதல் இறுதி வரை ஒருங்கிணைந்த தன்னியக்கமாக்கும் முறை (End-to-End Automation) ரூ. 5 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
ஆவின் பால் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வணிக உரிம முறையில் (Business Franchisee) 10 புதிய அதிநவீன ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும்.
மாநிலத்தில் உள்ள 100 தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையங்களை மேம்படுத்தும் விதமாக ரூ. 8.81 கோடி மதிப்பீட்டில் துணை உபகரணங்கள் நிறுவப்படும்.
வேலூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் ரூ. 5.18 கோடி மதிப்பீட்டில் 112 சிறந்த மரபியல் திறனுள்ள கலப்பின ஜெர்சி பொலிகாளை கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பண்ணைகளுக்கு வழங்கப்படும்.
ஜெர்சி கலப்பின கன்றுகளில் பால் உற்பத்தி திறனை உயர்த்த அறிவியல் பூர்வமான கன்று வளர்ப்பு மற்றும் இனவிருத்தி மேலாண்மை பணிகள் ரூ. 10 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
பால் உற்பத்தி மற்றும் கொள்முதலை ஊக்குவிக்க ஒவ்வொரு ஒன்றியத்திலும் சிறப்பாகச் செயல்படும் முதல் 3 பால் உற்பத்தியாளர்கள், மகளிர் பால் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் (MPCS) மற்றும் சங்கச் செயலாளர்களுக்கு 'ஆவின் வெற்றி விருதுகள்' மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுவர்.
சென்னையில் அதிகரித்து வரும் பால் விற்பனை மற்றும் உற்பத்தித் தேவையை நிறைவு செய்யும் வகையில், ரூ. 2 கோடி மதிப்பீட்டில் அம்பத்தூர் பால்பண்ணை நவீனமயமாக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.
பாலின தரத்தை சோதிக்கும் வசதிகளை உயர்த்தும் நோக்கில் ஈரோடு ஒன்றியத்தில் தர ஆய்வகம் ரூ. 31.5 லட்சத்திலும், திருவண்ணாமலை ஒன்றியத்தில் தர ஆய்வகத்திற்கு கூடுதல் உபகரணங்கள் ரூ. 11.25 லட்சத்திலும் நிறுவப்படும்.
கிராமப்புறங்களில் கொள்முதல் செய்யப்படும் ஆரம்ப நிலை பாலின் தரத்தினை பாதுகாக்கும் பொருட்டு, ரூ. 25.45 கோடியில் 60 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் மற்றும் 40 தொகுப்பு குளிர்விப்பு நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள் நிறுவப்படும்.
கால்நடை ஊட்டச்சத்து, தீவன மேலாண்மை மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள 500 பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் பிற மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பயிற்சி பெற ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் களப்பயணம் மேற்கொள்ளப்படும்.