×

#JUST IN : சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசிய தலைவராக தமிழரான கராத்தே முருகன் நியமனம்..!!

 

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சமய பணிகளை ஆற்றிவரும் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசிய தலைவராக தமிழரான கராத்தே முருகன் நியமனம்..

கராத்தே முருகன் எனப் பிரபலமாக அறியப்படும் ஆர். முருகன் செல்வன், சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த முருகன் செல்வன், புகழ்பெற்ற விளையாட்டு வீரரும் பயிற்சியாளருமாக மட்டும் இல்லாமல், சிறந்த எழுத்தாளராகவும், சிந்தனையாளராகவும் மற்றும் தொழில் முனைவோருமாக உள்ளார்.
நேற்று (ஜூன் 7) நடைபெற்ற சிறப்பு தேசிய செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக இவர் தேசிய தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஓராண்டாக சமாஜத்தின் செயல் தலைவராகப் பணியாற்றியுள்ள முருகன் செல்வன், புதிய பொறுப்பிற்கு ஏற்ப, தனது தலைமை தாங்கும் அனுபவத்தைக் கொண்டு சிறப்பாக செயல்பட உள்ளார். சர்வதேச கராத்தே சாம்பியன்ஸ் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர். மற்றும் விளையாட்டுத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
முன்னாள் தேசியத் தலைவர் எஸ். ஜே. ஆர். குமார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக கூட்டப்பட்ட தேசிய செயற்குழுக் கூட்டத்தில், மூத்த அறங்காவலரும் அன்னதானக் குழுவின் தற்போதைய தலைவருமான டி. பி.சேகர், இப்பதவிக்கு முருகன் செல்வனின் பெயரைப் பரிந்துரைத்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் இந்த பரிந்துரைக்கு ஒருமனதான ஆதரவு கிடைத்தது.
ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களான எஸ். சேதுமாதவன், வி. கே. விஸ்வநாதன், ஏ. ஆர். மோகனன், சமாஜத்தின் தேசிய அமைப்புச் செயலாளர் ஈரோடு ராஜன் மற்றும் பிற தேசிய, மாநில அளவிலான நிர்வாகிகள் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் முருகன் செல்வனுக்கு தங்களது நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
"என் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது குழந்தைப்பருவத்தை கடந்து 18-வது வயதை நிறைவு செய்யும் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் பன்முக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அனைத்து உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் உள்ளேன். இந்த அமைப்பை பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் அதன் கட்டமைப்பையும், சேவைகளையும் மேலும் வலுப்படுத்தவும், ஐயப்ப பக்தர்களை ஒருங்கிணைத்து, அந்த சக்தி மூலம் சமூக நல்லிணக்கத்தின் அடிப்படையிலான சமூக மறுமலர்ச்சி விரைவாக அடையப்பட வேண்டும். அதற்காக நான் உறுதியுடன் தொட்ட செயல்பட உள்ளேன் என்று, தமது நியமனத்திற்கு நன்றி தெரிவித்து பேசும்போது முருகன் செல்வன் தெரிவித்தார்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சேவை, பக்தி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளைத் தொடர்ந்து செய்து வரும் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்திற்கு, தேசிய தலைவர் என்ற முறையில் முருகன் செல்வன் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துவார் என்று மதிப்பிடப்படுகிறது.