×

#JUST IN : பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா: ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர் 8-க்குள் அதிரடியாக நுழைந்தது!

 

கொழும்பு மைதானத்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் பரபரப்பான ஆட்டத்தில், பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் ஏதுமின்றி வெளியேறி அதிர்ச்சியளித்தாலும், இஷான் கிஷான் ருத்ரதாண்டவம் ஆடினார். பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 27 பந்துகளில் அரைசதம் கடந்து, மொத்தமாக 77 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோரின் பங்களிப்போடு இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பாகிஸ்தான் அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே சிம்மசொப்பனமாக விளங்கினர். ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ராவின் அனல் பறக்கும் பந்துவீச்சில் அந்த அணியின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். உஸ்மான் கான் (44) சற்று போராடிய போதிலும், மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருண்டது. இந்த வெற்றியின் மூலம் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, இந்திய அணி கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

ஆட்டத்தின் அனல் ஒருபுறம் இருக்க, மைதானத்தில் அரங்கேறிய ஒரு நிகழ்வு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த முறையைப் போலவே, இந்த முறையும் பாகிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுக்க இந்திய வீரர்கள் மறுத்தது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. டாஸ் போடும் நிகழ்வின் போது சூர்யகுமார் யாதவ் கை குலுக்காமல் சென்றது முதல், போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்த்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறியது வரை, இந்த 'கை குலுக்கல் தவிர்ப்பு' கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.