×

#JUST IN :  இபிஎஸ் இன்று டெல்லி பயணம்..!!

 
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் முதலாவதாக கூட்டணியை உறுதி செய்த அதிமுக - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை இன்னும் வெளிப்படையாக தொடங்கவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளிடையே நிலவும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விரைவில் தமிழகம் வர உள்ளார்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீர் பயணமாக டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அதிமுகவின் செல்வாக்குமிக்க தொகுதிகளான சென்னை தி.நகர், மயிலாப்பூர், விருகம்பாக்கம், வேளச்சேரி, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், அவிநாசி, ஓசூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜகவும் பட்டியலிட்டு, அதிமுகவிடம் தொடர்ந்து கேட்டு வருவதால் தொகுதிகளை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் அதிமுக - அமமுக இரண்டும் சம பலத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளை கேட்டுவரும் நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நிறைவுசெய்ய முடியாமல் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதனிடையே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், அதிமுக - பாஜக - அமமுக இடையே சுமூக முடிவை எடுப்பது தொடர்பாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.