#JUST IN : கோவை திமுக நிர்வாகி அதிரடி நீக்கம்!
தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை மேட்டுப்பாளையம் தொகுதி தி.மு.க. வேட்பாளராக கவிதா கல்யாணசுந்தரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021 தேர்தலில் மேட்டுப்பாளையம் தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர். சண்முகசுந்தரம், இந்தமுறையும் தனக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். தொகுதி முழுவதும் ஆங்காங்கே நலத்திட்ட உதவிகள் வழங்கி, பரிசுகளை இறக்கி மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தார். தலைமை கவிதாவை டிக் அடித்ததால், சண்முகசுந்தரம் நொந்து போனார்.
சீட் கிடைக்காத வேதனையில் அவர் கண்ணீர்விட்டு அழுதார். அவரை மக்கள் ஆறுதல்படுத்தும் வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது. தி.மு.க., தலைமை மற்றும் வேட்பாளர் கவிதாவுக்கு எதிராக சண்முகசுந்தரத்தின் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து, டி ஆர் சண்முக சுந்தரம் சுயேட்சையாகப் போட்டியிடுவதற்கா வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடக்கு மாவட்டம் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த டி.ஆர்.சண்முகசுந்தரம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் இன்று அறிவித்துள்ளார். திமுக கழக கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததாலும் தெரிவித்துள்ளார்.