#JUST IN : டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்..!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் முதல்முறை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று காலை ஒன்பதரை மணியளவில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டு மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடைந்த முதலமைச்சர் விஜய், தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
டெல்லி சேவா தீர்த் பவனில் இன்று மாலை நான்கரை மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டிற்கான நலத்திட்டங்கள், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு தடை விதிப்பது உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தவுள்ளார்.
இதைத்தொடர்ந்து மாலை 6.45 மணிக்கு அடல் ஆவாஸ் ஊர்ஜா பவனில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதலமைச்சர் விஜய் சந்திக்கவுள்ளார்.மாலை 7.30 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் அவர், தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்க உள்ளார்.
டெல்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இன்றிரவு ஓய்வெடுக்கும் முதலமைச்சர் விஜய் நாளை சென்னை திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் போது ஏராளமான கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வைக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக மேகதாது விவகாரம், முல்லைப் பெரியாறு அணை நீர் பகிர்வு, தமிழகத்திற்கு தேவையான நிதிப் பகிர்வு உள்ளிட்ட கோரிக்கைளை விஜய் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.