×

#JUST IN : அமைச்சரிடம் பேரம் பேசிய அர்ச்சகருக்கு செக்..! ஒரே நாளில் 5 பேர் மீது பாய்ந்த நடவடிக்கை!

 

இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரமேஷ் பல்வேறு கோவில்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

 சில தினங்களுக்கு முன் திருச்சி கோவிலில் ஆய்வு செய்த பிரசாதங்களில் காலாவதி தேதி குறிப்பிடவில்லை என்பதை கண்டறிந்தார். தமிழகம் முழுவதும் உள்ள கோவில் பிரசாதங்களில் காலாவதி தேதி கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பித்தார். 

அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று ஆய்விற்காக சென்றுள்ளார். அவர் அமைச்சர் பொறுப்பு வகிப்பது தெரியாத வகையில் தனது உதவியாளருடன் சாதாரண மனிதர் போல் சென்று இருக்கிறார். கோவில் வளாகத்திற்கு வந்து சுற்றிப்பார்த்துள்ளார். அப்போது கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கட்டணம் எவ்வளவு? என அங்கு இருந்த அர்ச்சகர்களிடம் அமைச்சர் ரமேஷ், அவரது உதவியாளர் கேட்டு இருக்கின்றனர். 

இதற்கு அர்ச்சகர் ஒரு ஆளுக்கு 2 ஆயிரம் ரூபாய், இரண்டு பேருக்கு 4 ஆயிரம் ரூபாய் தாருங்கள் என்று கேட்டு இருக்கிறார். அந்த அர்ச்சகரிடம் அமைச்சர் உதவியாளர் பணம் இல்லை, ஜிபேயில் தான் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். உடனே அர்ச்சகர் தனது ஜிபே நம்பரை சொல்லி ரூ.4 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டார்.பிறகு அமைச்சர் ரமேஷ் மற்றும் அவரது உதவியாளரிடம் ரூ.4 ஆயிரம் பெற்ற அர்ச்சகர், அவர்களின் உண்மையான அடையாளம் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து முடி காணிக்கை செலுத்தும் இடம் உள்ளிட்ட கோவில் வளாகத்தில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனத்திற்கு முறைகேடாக ரூ.1,000 வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அர்ச்சகர் ஐயப்பன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கோயிலில் ஆய்வு நடத்திய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின் பேரில், மறு உத்தரவு வரும் வரை அர்ச்சகர் ஐயப்பன் கோயிலில் பூஜை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் குறித்து கோயில் நிர்வாகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் திருச்செந்துார் கோவில் பாதுகாவலர்கள் 2 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.முடி இறக்கும் தொழிலாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் அர்ச்சகர் ஐயப்பன் கோவிலில் பூஜை செய்ய தடை. என மொத்தம் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து வெளியான அறிக்கையில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் 29.05.2026 அன்று திருக்கோயில் வளாகத்தில் ஆய்வு செய்ததில் இத்திருக்கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்களிடம் அர்ச்சனை கைங்கரியம் செய்து வரும் திரு.ஐயப்பன், த/பெ. ஞானமணி என்பவர் தரிசனத்திற்கு முறைகேடாக பணம் பெற்று வந்தது தெரிய வந்தது. 

மேற்படி திரு.ஐயப்பன் ஐயர் என்பவரை மாண்புமிகு அமைச்சர் விசாரணை செய்ததில் திரிசுதந்திரர் திரு.ஐயப்பன் ஐயர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்றும் அன்னார் மீது தக்க நடவடிக்கை எடுக்க பார்வை 1ல் காணும் குறிப்பின் மூலம் உள்துறை கண்காணிப்பாளரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மேற்படி பொருள் குறித்து திரு.ஐயப்பன் ஐயர் குற்றத்தை ஒப்புக்கொண்டு 29.05.2026 தேதிய கடிதத்தில் தாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன் பார்வை 2ல் காணும் குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

இத்திருக்கோயில் நலன் மற்றும் பக்தர்களின் நலன் கருதி இதற்கு மேல் கைங்கரியம் செய்திடும் பட்சத்தில் தங்களது செயல்பாடுகள் ஏற்க கூடியதாக இருக்காது என்பதால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதாக உள்ளது.

எனவே திருச்செந்தூர் திரு.ஐயப்பன், த.பெ.ஞானமணி என்பவரை சட்டப்பிரிவு 56(1)-ன் கீழ் இவ்வுத்தரவு தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இத்திருக்கோயில் பூஜை கைங்கரியம் செய்வதற்கு தடை செய்து உத்தரவிடப்படுகிறது.