×

#JUST IN : கோயில் வேலைக்கு லஞ்சமா? புகார்களுக்கு தனி இ-மெயில் அறிவிப்பு..!

 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
 
அவரது அறிவிப்பில், "கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாகப் பணம் வசூலித்தல், திருக்கோயில் திருப்பணிகளில் முறைகேடு மற்றும் கோயில் வேலைவாய்ப்புகளுக்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தால், பொதுமக்கள் தகுந்த ஆதாரங்கள் மற்றும் விளக்கங்களுடன் எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு (minister_hrce@tn.gov.in) புகார்களை அனுப்பலாம்" என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், பெறப்படும் புகார்கள் மீது தாமதமின்றி, அவரும் அவரது அமைச்சக அலுவலகமும் நேரடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். 

ஆன்மிகத் தலங்களில் தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய அமைச்சர் ரமேஷ் எடுத்துள்ள இந்த அதிரடி டிஜிட்டல் ஆக்ஷன் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அண்மையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் ரமேஷ், சாதாரண பக்தரைப் போல முகக்கவசம் அணிந்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறப்பு தரிசனத்திற்காக அவரிடமே ஊழியர்கள் லஞ்சம் பெற்றதை கையும் களவுமாகப் பிடித்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர் மற்றும் பணியாளர்களைப் பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடித்தக்கது.

அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு…

— TVK Ramesh (@RameshOffcl) July 3, 2026