#JUST IN : மறைந்த இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!
1977ம் ஆண்டு '16 வயதினிலே' படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தவர் தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இன்று வரை கோடான கோடி ரசிகர்களை வசப்படுத்தி வைத்திருப்பவர். பல இளைஞர்களின் கனவுகளில் ஹீரோவாகி சினிமாவை நோக்கி படை எடுக்க வைத்தவர். அவரின் பட்டறையில் பயிற்சி பெற்ற பலரும் இன்று பிரபலமான இயக்குநர்களாக இருப்பதே அதற்கு ஒரு சான்று. சினிமா தெரியாதவருக்கு கூட மானசீக குருவாக இருந்து சினிமா கற்றுக்கொடுத்தவர். தமிழ்நாட்டு கிராமங்களின் வாழ்வியல், நம்பிக்கை, கனவு, ஆசை என அனைத்தையும் ரத்தமும் சதையுமாக சினிமா மூலம் பதிவு செய்ய முடியும் என்பதை சாத்தியப்படுத்தியவர்.
சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் ரயில், வேதம் புதிது, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா என காலத்தால் அழியாத பல அற்புதமான காவியங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கு புது ரத்தத்தை பாய்ச்சியவர். உணர்வுபூர்வமான கதைக்களத்தோடு சேர்ந்து சிந்தனையை தூண்டும் கருத்தை எதார்த்தமாக நிலைநிறுத்தி இருப்பார். இப்படி ஒரு படத்தை பார்த்ததே இல்லையே என தமிழ் ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு வித்தியாசமான ஒரு சினிமாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய ட்ரெண்ட் செட்டர். அவரின் கதாபாத்திர கட்டமைப்பு, கதாபாத்திரங்களின் பெயர்கள், கதைசொல்லல், எடிட்டிங் என அனைத்துமே திரை ரசிகர்களுக்கு புதிதாக இருந்தது. பாஞ்சாலி, பரஞ்சோதி, சப்பாணி, மயிலு, குருவம்மா, பரட்டை என கேட்டறியாத பெயர்களை வைத்ததிலேயே அவரின் வெற்றி நிச்சயமானது.
வைரமுத்து, பாக்யராஜ், விஜயன் முதல் ராதிகா, ரேவதி, வடிவுக்கரசி உள்ளிட்ட எண்ணற்ற திறமையான கலைஞர்களின் திரை பயணமே பாரதிராஜாவால் தான் அரம்பமானது. தேசிய விருது,பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, தமிழக அரசின் மாநில விருது என பல விருதுகளும் பாரதிராஜாவின் கைகளில் கொஞ்சி விளையாடின.
80ஸ் காலகட்டத்தில் தொடர் வெற்றி எல்லாம் சாத்தியமே இல்லாமல் இருந்தது. ஆனால் அதை சாத்தியப்படுத்தி அடுத்தடுத்து 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் என தொடர் வெற்றிகளை அதுவும் திரையரங்கில் 200 , 300 நாட்கள் கொண்டாடப்பட்ட படங்களாக கொடுத்து சரித்திரத்தில் தன்னுடைய பெயரை செதுக்கி வைத்தவர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 10) பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை நீலாங்கரை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மாலை அணிவித்து ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தியதோடு, குடும்பத்தினர், உறவினர்கள்,திரையுலகினருக்கு ஆறுதல் கூறினார். பாரதிராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் '16 வயதினிலே', 'கொடி பறக்குது' போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல், ஸ்ரீதேவி, கவுண்டமணி ஆகியோரின் திரை வாழ்க்கையை திருப்புமுனையாக மாற்றி பெருமைக்கு சொந்தக் காரர் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
#JustNow || இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார்.. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு#Neelankarai | #DirectorBharathiRaja | #RIP | #Rajinikanth | #PolimerNews pic.twitter.com/j8IqAfRuJP
— Polimer News (@polimernews) June 10, 2026