வெறும் மன்னிப்பு மட்டும் கேட்டால்.. போலீஸ் கமிஷனருக்கு 2 வாரம் சிறைத் தண்டனை - அதிரடி உத்தரவு..!
தெலங்கானா மாநிலம் மேட்ச்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் உள்ள ஜீடிமேட்லா பகுதியில் 6.15 ஹெக்டேர் நிலம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம், அந்தக் குறிப்பிட்ட நிலத்தில் எந்தவித செயல்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அண்மையில் விசாரித்த தெலங்கானா உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட 6.15 ஹெக்டேர் நிலப்பகுதியில் எந்தவித அத்துமீறலும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.
அடுத்தக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, இந்த ஆணை அமலில் இருக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த உத்தரவை காவல்துறை செயல்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, வழக்கில் சம்பந்தப்பட்ட பிரவீன் என்பவர், தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கானது, நீதிபதி சி.வி.பாஸ்கர் ரெட்டி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி கூறுகையில், "சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான சிவில் வழக்கு நிலுவையில் இருப்பதால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை காவல்துறை செயல்படுத்தவில்லை என்ற காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இருக்கும் போது, அதற்குரிய நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றங்களை விசாரித்தது குறித்து நாங்கள் போலீசாரிடம் கேள்வியெழுப்பவில்லை.
அதே சமயத்தில், விசாரணை என்கிற பெயரில் ஒரு சிவில் விவகாரத்தில் காவல்துறையின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதேபோல, நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்க முடியாது.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் முழு விவரமும் சைபராபாத் காவல் ஆணையருக்கும், துணை காவல் ஆணையருக்கும் நன்றாக தெரிந்திருக்கிறது என்பதை காவல்துறை சமர்ப்பித்த அறிக்கை மூலமாகவே புரிந்துகொள்ள முடிகிறது.
நீதிமன்ற உத்தரவை அவமதித்துவிட்டு வெறும் மன்னிப்பு மட்டும் கேட்டால், அதன் பின்விளைவுகளில் இருந்து தப்பித்து விடலாம் என்ற நிலை இருக்கக் கூடாது. இதுபோன்ற மன்னிப்பை எல்லாம் ஏற்க முடியாது.
இதனை உச்ச நீதிமன்றமே தெளிவாக கூறியுள்ளது. எனவே, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் இருந்த குற்றத்திற்காக சைபராபாத் காவல் ஆணையர் ரமேஷ், துணைக் காவல் ஆணையர் என்.கோட்டி ரெட்டி ஆகியோருக்கு இரண்டு வாரகால சிறைத் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது" என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஒருவாரம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் தங்கள் உத்தரவில் நீதிபதி தெரிவித்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஒரு வாரக்காலம் அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதில் எந்த தடையும் விதிக்கப்படாத பட்சத்தில், உயர் நீதிமன்ற பதிவாளர் முன்பு இருவரும் சரண் அடைய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்