“25 வருஷத்துக்கு தளபதி ஆட்சி தான்! அவர எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போக வந்தேன்”- தவெகவில் இணைந்த MGR-ன் பேரன் பேட்டி
அதிமுகவின் கீழ் மாநில இளைஞரணி இணைச் செயலாளராக இருந்த எம்.ஜி.ஆர் பேரன் ஜூனியர் எம்.ஜி.ஆர் தற்போது த.வெ.கவில் இணைந்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜூனியர் எம்.ஜி.ஆர், “நான் உங்கள் ஜூனியர் எம்.ஜி.ஆர். திரு. எம்.ஜி.ஆர் ஐயா அவர்களின் பேரன். நான் ராமாவரம் தோட்டத்தில் வசித்து வருகிறேன், இவ்வளவு நாட்களாக நான் அதிமுகவின் கீழ் மாநில இளைஞரணி இணைச் செயலாளராக இருந்தேன். நமது தளபதி விஜய் எப்போது டி.வி.கே கட்சியைத் தொடங்கினாரோ, அப்போதே இளைஞர்களாகிய நாங்கள் பலரும் அதில் இணைந்துவிட்டோம், இன்று நான் இங்கு வந்ததற்கான காரணம், ஒரு மரியாதை நிமித்தமாக அமைச்சர்கள் அனைவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காகவே. மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இதுவரை முதலமைச்சரான பிறகு, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மட்டும்தான் எம்.ஜி.ஆர் ஐயாவின் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சரான பிறகு இதுவரை வரவில்லை. இனி வருவாரா என்றும் தெரியவில்லை. இப்போது எம்.ஜி.ஆர் குடும்பத்தின் சார்பாக, ஜூனியர் எம்.ஜி.ஆரான நான், திரு.விஜய் அவர்களையும் அவரது அமைச்சரவையையும் எங்கள் வீட்டிற்கு வருமாறு அழைக்கிறேன், அதைத் தெரிவிப்பதற்காகவே நான் அவரைப் பார்க்க வந்தேன்.
இந்த 20 நாட்களில் என்ன செய்துவிட்டீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. அவர்கள் அதை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள், தளபதியின் இந்த ஆட்சி இன்னும் 25 வருடங்களுக்குத் தொடர்ந்து நிலைக்கும் என்று நான் நம்புகிறேன். இது நிச்சயமாக நிலைக்கும். தேர்தல் நேரத்தில் பலரும் இது ஒரு குழுவே கிடையாது என்றும், அவர் ஒரு நடிகர் என்பதால்தான் இளைஞர்கள் கூட்டம் கூடுகிறது என்றும் விமர்சித்தார்கள். ஆனால், அந்த கூட்டத்தை எல்லாம் அவர் வாக்குகளாக மாற்றி, இன்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் சாதித்துவிட்டார். அவர் சாதிப்பார் என்று எங்களுக்கு முன்பே தெரியும். தெரியாதவர்கள் இனிமேல் தெரிந்துகொள்ளட்டும்” என்றார்.