×

பாஜகவில் அசாதாரண சூழல்- தமிழகம் வருகிறார் ஜேபி நட்டா

 

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 10ம் தேதி தமிழகம் வரவுள்ளார்.

தமிழகத்தில் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த நிர்மல் குமார், அந்தக் கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். பாஜகவிலிருந்து விலக அண்ணாமலைதான் காரணம் என்றும்,  420 மலை என்றும் கடுமையாக சாடியிருந்தார். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அன்பு சகோதரர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்” என ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். 

நிர்மல் குமார் கட்சியிலிருந்து விலகி 24 மணிநேரத்திற்குள் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் கட்சியில் இருந்து விலகினார். அவரும் பாஜகவின் அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அதுமட்டுமின்றி, வார் ரூம் கோஷ்டிகள் என்னைபோல் இன்னும் எத்தனை பேரை கட்சியிலிருந்து வெளியேற்ற போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் எனக் கூறியிருந்தார். 

இவ்வாறு பாஜகவில் அசாதாரணமான சூழல் நிலவிவரும் சூழலில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 10ம் தேதி தமிழகம் வரவுள்ளார்.கிருஷ்ணகிரியில் புதிய மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தவும் உள்ளார். அப்போது பாஜக தலைமையுடன் கட்சியில் நிலவும் சலசலப்புகள் குறித்து கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.