“சிபிஐ,ED,IT வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது"- ஜோதிமணி
அமலாக்கத்துறை,சிபிஐ ,வருமானவரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ஜோதிமணி எம்பி தனது எக்ஸ் தளத்தில், “ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு,விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும். ஒரு திரைப்படம் என்பது பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கானவர்களின் கடின உழைப்பில் உருவாகிறது. அதை இப்படி முடக்க நினைப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படுவது இன்னும் ஆபத்தானது. அமலாக்கத்துறை,சிபிஐ ,வருமானவரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது. இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது
நான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதன் செயல்பாடுகளை நான் நன்கு அறிவேன்.என்னளவில் இந்த தொழில்நுட்ப யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது காலாவதியாகிப் போன ஒரு அமைப்பு. ஒரு திரைப்படத்தை ஏற்பதும்,மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது. ஒரு திரைப்படத்தை நாம் தணிக்கை செய்துகொண்டிருக்கிற அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தணிக்கை செய்யப்படாத வீடியோக்கள் ,காட்சிகள் தொலைக்காட்சி, யு டியூப்,சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிக்கொண்டிருக்கிறது. இதை பல கோடிப்பேர் பார்க்கின்றனர்.இந்தச் சூழலில் திரைப்படத்தை மட்டும் தணிக்கை செய்வதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே நிதர்சனம். பெண்களை ஆபாசமாகப் பேசுவது,சித்தரிப்பது,இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது தணிக்கை விதிகளின் படி தவறானது. ஆனால் இவை இல்லாமல் வெளிவருகிற படங்கள் மிகவும் குறைவு. தணிக்கை வாரியம் இம்மாதிரியான விசயங்களில் பெரும்பாலும் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. சான்றிதழை மறுப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது. அதுவரை அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.