×

“பட்ஜெட்டில் மக்களுக்கு பிடித்த அறிவிப்புகள் வெளியாகியிருப்பது ஆறுதல்”-  ஜோஸ் சார்லஸ் மார்டின்

 

தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 இலவச LPG சிலிண்டர்கள், அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், 20 லட்சம் வரை பிணையில்லாக் கல்விக்கடன் ஆகிய பல முக்கிய வாக்குறுதிகள் பட்ஜெட் 2026-27 அறிவிப்பில் இல்லை என்பது சற்று ஏமாற்றத்தையே தருகிறது. இருப்பினும், புதிய அரசாக இருந்து, பொதுமக்களுக்குப் பிடித்தமான பல அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது ஆறுதல் தருகிறது. அதை லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் நான் வரவேற்கிறேன் என அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜோஸ் சார்லஸ் மார்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, முதன்முதலாக தமிழ்நாடு அரசின் 2026-27-பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ததில், இந்தியாவின் முதல் AI நகர சாத்தியக்கூறு ஆய்விற்கு ரூ.5 கோடி, மீனவர்களுக்கு பணியில்லாக் கால மீன்பிடி உதவித்தொகை ரூ.6ஆயிரத்திலிருந்து ரூ.7ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன்.கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வெற்றி மடிக்கணினித் திட்டத்திற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு; 11ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு ஹெல்மெட் & வாட்டர் பாட்டில் வசதியுடன் நவீன மிதிவண்டி வழங்க ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம், வரும் தலைமுறை கல்வியில் இன்னும் மேம்படும் என நம்பிக்கைப் பிறக்கிறது.

மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டது; அண்ணனின் சீர் திட்டம் உருவாக்கப்பட்டு பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை ஆகியவை வழங்கப்படுவதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பலருக்கும் நன்மைகளைத் தரும் திட்டமாகும்.20ஆயிரம் இளைஞர்களுக்கு பணியிடப் பயிற்சி; பட்டதாரிகள் மற்றும் தொழிற்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு மாத உதவித்தொகைக்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது; மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைத்து ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு பயிற்சி வழங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது இவை எல்லாமே வரவேற்புக்குரிய திட்டங்கள் தான்.
கடற்கரையினைப் பாதுகாத்து, பருவநிலை மாற்ற பாதிப்பினைக் குறைக்க கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 2500 ஹெக்டேரில் புதிய அலையாத்தி காடுகள் உருவாக்க ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும்; ஒகேனக்கல் - திருவரங்கம், மதுரை & பாபநாசம் - திருநெல்வேலியில் நதிச் சுற்றுலா வழித்தடங்களை உருவாக்க ரூ.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்புக்குரியது.அதேநேரம், தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 இலவச LPG சிலிண்டர்கள், அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், 20 லட்சம் வரை பிணையில்லாக் கல்விக்கடன் ஆகிய அறிவிப்புகள் வெயியிடப்படாதது சற்று ஏமாற்றத்தையே தருகிறது. இருப்பினும், புதிய அரசாக இருந்து, பொதுமக்களுக்குப் பிடித்தமான பல அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது ஆறுதல் தருகிறது. அதை லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் நான் வரவேற்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.