ராஜபாளையம் தொகுதியில் மனைவியை களமிறக்கும் ஜான் பாண்டியன்! புகுந்த வீடான ‘தாமரை’ சின்னத்தில் போட்டி என அறிவிப்பு
ராஜபாளையம் தொகுதியில் ஜான் பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் போட்டியிடவுள்ளார் என ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன், “தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக ஜனநாயக முறைப்படி நேற்றைய தினம் நிர்வாக குழு கூட்டி மூன்று பேர் போட்டியிட்டனர். வேட்பாளராக பொதுச் செயலாளர் பிரிசில்லா ஜான் பாண்டியனை ஓட்டெடுப்பு மூலமாக தேர்வு செய்துள்ளோம். இன்று மாலையிலிருந்து தொகுதிக்குச் சென்று பணிகளை தொடங்க இருக்கிறார். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக எடப்பாடி வருவார்.ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பிரிசிலா பாண்டியன் போட்டியிடுகிறார்.
ராஜபாளையம் மக்களுக்காக சேவை செய்வதற்காக காத்திருக்கிறார்.தொழிற்சாலைகள் நிறைந்த இடம். அதிக மில்கள் ராஜபாளையம் பகுதியில் மூடப்பட்டிருக்கிறது அதை எல்லாம் திறக்க வேண்டும். இதற்கு முன்பிருந்த சட்டமன்ற உறுப்பினர் அந்த தொகுதிகள் எந்த நல்லதையும் செய்யவில்லை. தாமரை சின்னத்தை நாங்கள் முக்கியமாக பார்க்கிறோம். பிரதமர் மோடியை எங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக அழைக்க வாய்ப்பு இருக்கிறது. நிச்சயமாக தொகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் பிரச்சனைகள் அனேக பிரச்சனை சரி செய்வோம். தாய் சின்னமாக இருப்பது இரட்டை இலை சின்னம். நான் புகுந்த வீடாக இருக்கும் சின்னம் பாஜக தாமரை சின்னம். ஆகவே தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன்” என்றார்.