"ஓபிஎஸ்க்கு தனியாக தொண்டர்கள் யாரும் கிடையாது”- ஜான் பாண்டியன்
திமுகவுடன் தொடர்பில் இருக்கிறார் என்ற எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டை ஓ.பன்னீர்செல்வம் உறுதி செய்துள்ளார் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன், “ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைய உள்ளார் என்பது சட்டமன்றத்தில் அவர்கள் நடந்து கொண்ட செயல்பாடுகளிலே தெரிந்துவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். ஏற்கனவே பேசிக் கொண்டிருப்பதை அவர் உறுதி செய்து விட்டார் அவ்வளவுதான். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை யாரும் சந்தித்து கூட்டணிக்கு அழைக்கவில்லை. தற்போது ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது அவர் எடுத்த முடிவு. எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.
ஓபிஎஸ் எனும் ஒரு தனி மனிதர் திமுகவுக்கு சென்றிருப்பதால் தென் மாவட்டங்களில் எங்கள் கூட்டணிக்கு வெற்றி பாதிப்பு எதுவும் ஏற்படாது. அவருக்கென தனியாக தொண்டர்கள் யாரும் கிடையாது. அவருடன் அவர் மகன் மட்டும்தான் திமுகவில் இணைந்து உள்ளார். 1000 பேர் கூட இணையவில்லை, எப்போதும் ஒரு தனி மரம் தோப்பாகாது. இருவரும் சென்றிருப்பதால் எந்த வித இழப்பும் ஏற்படவில்லை. ஓ பன்னீர்செல்வம் திமுகவுடன் தொடர்பில் இருக்கிறார் என ஆரம்ப காலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அதை தற்போது ஓ பன்னீர்செல்வம் உறுதி செய்துள்ளார். இதனால் எங்களுக்கு எந்த நஷ்டமும் கிடையாது” என்றார்.