×

ஜார்க்கண்டில் மயிரிழையில் தப்பிய பெரும் விபத்து: மூடப்படாத ரயில்வே கேட்டில் லாரி மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்!

 

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டம் நவாத் பகுதியில் இன்று காலை பெரும் ரயில் விபத்து ஒன்று நூலிழையில் தவிர்க்கப்பட்டது. கோண்டாவிலிருந்து அசன்சோல் நோக்கிச் சென்று கொண்டிருந்த கோண்டா-அசன்சோல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒரு ரயில்வே கிராசிங்கைக் கடக்க முயன்றபோது அங்கிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. அந்தச் சமயத்தில் ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததும், வாகனங்கள் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்ததும் விபத்துக்குக் காரணமாக அமைந்தது.

சிக்னல் கொடுக்கப்படாத நிலையில் ரயில் மிக அருகில் வந்ததைக் கண்ட இன்ஜின் டிரைவர், துரிதமாகச் செயல்பட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்தார். இதனால் ரயில் லாரியின் மீது மோதிய போதிலும், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் வாகன ஓட்டிகள் இருவர் லேசான காயமடைந்த நிலையில், ரயிலில் பயணித்தவர்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் அனைவரும் எவ்வித உயிரிழப்புமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்து குறித்த தகவலறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றி தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் காரணமாக அந்த வழித்தடத்தில் சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.