"234 எம்எல்ஏக்களிடமும் சத்தியம் வாங்கிய முதல்வர் விஜய்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
மக்களுக்கு உண்மையாக நேர்மையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் எங்களை மேடையில நிக்க வச்சி சத்தியம் வாங்கினாரு.. இந்தியாவில் எந்த முதலமைச்சரும் செய்தது இல்லை என சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் கூறினார்.
கொடைக்கானல் கீழ்மலை கிராமத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், “முதியோர் இல்லத்தில் உள்ளவர்களிடம், 'நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்?' என்று கேட்டால், அந்த முதியோர்கள் சொல்லும் அந்த வரலாறு மனதை வேதனைப்படுத்துகிறது. பெற்று, வளர்த்து, ஆளாக்கி, அழகு பார்க்கும் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் நிலை குறைய வேண்டும். தற்போதைய சூழலில், பெண்களின் பெற்றோரை அரவணைக்கும் வகையில் இளைஞர்கள் அனுசரித்துச் செல்ல வேண்டும். குடும்பப் பிரச்னைகளால் பெற்றோர்களை பிரித்து வைக்கும் நிலை வேண்டாம். வாழும் போது பெற்றோர்களை மதிக்கத் தெரியாமல், வணங்கத் தெரியாமல், அவர்கள் இறந்த பிறகு அழுவதில் ஒரு பயனும் இல்லை. பெற்றோர்களை மதிக்கும் பண்பை இளைஞர்களும், மாணவர்களும் கடைப்பிடிக்க வேண்டும்.
ஜாதி மற்றும் பணம் படைத்தவர்கள் மட்டும்தான் ஆட்சியில் அமர முடியும் என்ற நிலையை இந்த தவெக ஆட்சி மாற்றியுள்ளது. வாக்களித்த மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று கூறி, 234 சட்டமன்ற உறுப்பினர்களையும் முன்னிலைப்படுத்தி முதல்வர் விஜய் சத்தியம் வாங்கினார். அதையெல்லாம் நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. இது இந்தியாவிலேயே எந்தக் கட்சியினரும் செய்யவில்லை. நேர்மையாக இருப்போம் என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறோம். அந்தப் பணியைதான் தற்போது ஆளுங்கட்சியினர் செய்து வருகின்றனர்” என்றார்.