நடந்து சென்றவர்களை அடித்து தூக்கிய ஜேசிபி..! தவெக தொண்டர் உட்பட 2 பேர் பலி - 4 பேர் படுகாயம்..!
Sep 13, 2025, 09:05 IST
கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவர், கனரக ஜேசிபி மற்றும் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை (செப்.12), இவர் கிரேனில் விவேகானந்தபுரம் பகுதியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/qFPcM4727wA?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/qFPcM4727wA/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">
சர்ச் ரோடு அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கிரேன், சாலையில் தாறுமாறாக அங்குமிங்குமாக வேகமாக ஓடியது. அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, நிற்காமால் சாலையோரம் நடந்துச்சென்ற இளைஞர் ஒருவர் மீதும், இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவர் மீதும் மோதியது. இறுதியாக, நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதி, சுவற்றில் இடித்து நின்றது.
இந்த கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் காயமடைந்த ஓட்டுநர் உட்பட 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கிரேன் மோதி உயிரிழந்தது அஞ்சுகிராமம், மைலாடி அவரிவிளையைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் சபரிகிரி (19) , கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகி முகமது ஷான் (35) என்பது தெரியவந்தது.
இதில், முகமது ஷான் சொந்தமாக துணிக்கடை நடத்தி வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அவருக்கு திருமணமாகி இருக்கிறது. கிரேன் ஆபரேட்டர் கணபதி மது போதையில் இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி ஸ்டாலின், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தற்போது, கிரேன் ஆபரேட்டர் கணபதியை போலீசார் கைது செய்துள்ளனர்.